Sri Lanka Crisis; நாட்டைவிட்டு தப்பியோடிய கோட்டபய ராஜபக்சே; சபாநாயகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மக்கள் போராட்டத்தின் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள நாட்டில் தங்கியுள்ளார், இலங்கை அதிபர் ராஜபக்சே கோட்டபய.
மக்கள் போராட்டத்தின் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள நாட்டில் தங்கியுள்ளார், இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே. இதனை இலங்கையின் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும், வரும் புதன்கிழமை பதவியை ராஜினாமா செய்ய இலங்கை வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில், நாளுக்கு நாள் இலங்கையில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. நேற்று முன் தினம், அதிபருக்கு எதிரான போராட்டத்தில் அதிபர் மாளிகையினை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் இருந்து தப்பிய அதிபர் கோட்டபய ராஜபக்சே, தற்போது நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக, இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நாளை மறுநாள், அதாவது புதன் கிழமை பதவியை ராஜினாமா செய்ய இலங்கை வருவார் எனவும் தெரிவித்துள்ள நிலையில், அவர் மீண்டும் நாட்டிற்கு வருவாரா அல்லது வரமாட்டாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. அவர் வந்தால் மீண்டும் போராட்டக்காரர்களின் கோபத்தினை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால், அவர் இலங்கை வருவதற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிபர்:
இப்படியான பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இலங்கையில் புதிய அதிபரை நியமிக்கவும், புதிய பாராளுமன்றத்தை தேர்வு செய்யவும் , நாளைய தினம் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக போட்டியிட எஸ்ஜேபி கட்சித் தலைவர் பிரேமதாசாவை நிறுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா:
இலங்கை மக்கள் தமது உரிமையை கேட்டு பெறுவதற்காகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், நீதி கோரி, வீதியில் இறங்கி உள்ள நிலையில் அவர்களின் போராட்டங்களை தாம் கவனித்து வருவதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த அமைதியான வழியில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை வரலாறு ஒரு கம்பீரமான வரலாறு என சொல்லி வந்த நிலையில், தற்போது அது பலவீனம அடைந்திருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டிருக்கிறது. இலங்கை அரசியலில் முழுமையான மாற்றத்தை அடைய வேண்டும் என்றால் மக்கள் அமைதியான முறையில் எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ஆதரவு அளிக்க தயார்:
இலங்கை நாடாளுமன்றம் ,நாட்டின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டுமென அமெரிக்க தூதர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் அரசியலமைப்பு ஊடாக ,புதிய அரசாங்கத்தை தேர்வு செய்து , நீண்ட காலம் நிலைத்து நிற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான தீர்வுகளை கண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அதேபோல் அமைதியான ஜனநாயக வழியில் இலங்கையில் அதிகார மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கா தூதர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இலங்கையில் மக்களுக்கு இடையே பாகுபாடற்ற, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும், இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கும் ,புதிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்காவும் ஏனைய நாடுகளுடன் இணைந்து ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அதேபோல் இலங்கையில் பிரதமர் இல்லம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டதற்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்தியா ஆதரவு:
இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஒரு நெருக்கடியான நிலையில் அந்நாட்டிற்கு உறுதுணையாக இருப்போம் என இந்தியா தெரிவித்திருக்கிறது. இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இந்தியா பல்வேறு வகைகளில் உதவிகளை செய்து வருகிறது. இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக செயல்படும் எனவும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்:
இலங்கையில் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்திற்கு ,புதிய அதிபரை நியமிக்கவும் ,புதிய பாராளுமன்றத்தை தேர்வு செய்யவும் , நாளைய தினம் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.