Srilanka protest: இலங்கையில் மீண்டும் போராட்டத்தில் பொதுமக்கள்; ராணுவம் களமிறங்கியதா?
இலங்கையில், பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராணுவம் மற்றும் போலீஸ் களமிறங்கியுள்ளன.
நேற்று நள்ளிரவு போராட்டம்:
இலங்கையில், நேற்று நள்ளிரவில் ,கடந்த 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பொதுமக்களை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் பலர் கடும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் சிலரை காணவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மீண்டும் போராட்டம்:
இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கொழும்பில் வீதித்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதாக சொல்லப்பட்டது. கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைதியான முறையில் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்:
இந்த நிலையில் லோட்டஸ் பகுதியில் பெருமளவு படையினர் தடியடி நடத்த தயாராகவும், கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் வண்டிகளோடும் தயார் நிலையில் இருந்தனர். இதில் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும், பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், கொழும்பில் இன்று அதிகாலை காலி முகத்திடல் பகுதியில் ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அதிரடி படையினர் போராட்டப் பகுதியில் இருந்த போராட்டக்காரர்களை தாக்குதல் நடத்தி வெளியேற்றினர். இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்ற நிலையில், இது போன்ற அடக்கமுறைகள், இலங்கை மக்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்