TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
TN Assembly: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த உரிமையை, உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
தமிழக சட்டசபையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்ரவரி 15ம் தேதி கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.
பிப்ரவரி 19ம் தேதி தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் கூடியாக வேண்டும். அந்த வகையில், பரபரப்பிற்கு சற்றும் குறைவில்லாத அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. சபாநாயகர் அப்பாவுவின் அறிவிப்பின்படி, டிசம்பர் 9, 10ம் தேதி என 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
முதல் நாளில் தனித்தீர்மானம்:
அதன்படி தமிழக சட்டப்பேரவை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. முதல் நடவடிகையாக மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்குகிறது.
எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து, 2024-2025-ம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பின்பு தமிழக அரசின் சார்பில் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட இருக்கிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இரண்டாவது நாள் நடவடிக்கை:
தொடர்ந்து இரண்டாவது நாளான நாளை கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கும். கேள்வி நேரம் முடிந்ததும், 2024-2025-ம் ஆண்டு துணை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிப்பார். தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நிறைவடைகிறது.
அதானி விவகாரம்
இன்று நடைபெறும் கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப முடிவு செய்துள்ளது. குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினும் தொழிலதிபர் அதானியும் சந்தித்ததாக கூறப்படும் விவகாரம், வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்காதது மற்றும் சட்ட ஒழுங்கு போன்ற பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.