மீண்டும் மீண்டுமா? ஐநா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமருக்கு கொரோனா.. உலக தலைவர்கள் அச்சம்
சமீபத்தில்தான், இவர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்-க்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில்தான், இவர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Spanish Premier Pedro Sanchez, who last week addressed UN General Assembly in New York, tests positive for COVID-19 https://t.co/e4c7W8axbG pic.twitter.com/lGv8xfGj9B
— ANADOLU AGENCY (@anadoluagency) September 26, 2022
பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுத்துறைக்கான அமைச்சர் கேத்தரின் கொலோனா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் இங்கிலாந்தின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் ஜேம்ஸ் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெட்ரோ சான்செஸ்-க்கு கொரோனா ஏற்பட்டிருப்பதால், உலக தலைவர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஸ்பெயினுக்கு திரும்பியுள்ள அவர் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "இன்று காலை, எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பார்சிலோனாவில் கட்டலான் பிராந்தியங்களின் சோசலிஸ்டுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன்" என பதிவிட்டுள்ளார்.
நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற ஐநா கூட்டத்தில் இருந்து பெட்ரோ வெள்ளிக்கிழமை அன்று நாடு திரும்பினார். தான் தொடர்ந்து பணிபுரிய போவதாகவும் ஆனால், அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அக்கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "உக்ரைன் போர் சென்று கொண்டிருக்கும் பாதை முழு சர்வதேச சமூகத்திற்கும் ஆழ்ந்த கவலைக்குரிய விஷயமாகும். மேலும், உணவு, தானியங்கள் மற்றும் உரங்கள் மற்றும் எரிபொருளின் அதிக செலவுகள் மற்றும் பற்றாக்குறையின் அடிப்படையில் அதன் விளைவுகளை உலகம் அனுபவித்துள்ளது.
இந்த கவுன்சில் ராஜதந்திரத்தின் மிகவும் சக்திவாய்ந்த சின்னமாகும். அதன் நோக்கத்திற்கு ஏற்ப அது தொடர்ந்து வாழ வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு தடை விதிக்கும் போது, ஒரு சிலருக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பொறுப்பை தவிர்த்து மறைமுகமாக அரசியல் செய்வது வருந்தத்தக்கது" என்றார்.