Mexico Shooting: அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம்.. மெக்ஸிக்கோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு..
மெக்ஸிகோவில் கேளிக்கை நிகழ்ச்சியின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணம் சொனராவில் உள்ள சிடெட் ஒபெகன் பகுதியில் நேற்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
கேளிக்கை நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 26 பேரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்த 6 பேரில் இருவர் 18 வயதுக்குட்பட்டவர்கள், படுகாயமடைந்த 26 பேரில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோனோரா மாநில வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்த தகவலின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, சட்ட விரோதமாக சுதந்திரம் பறித்தல் மற்றும் குற்றவியல் தொடர்பு ஆகியவற்றிற்காக கைது வாரண்ட் பெற்ற குற்றவியல் குழுவின் தலைவருக்கு எதிரான நேரடித் தாக்குதல் இது என்று ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநால் விழாவிற்காக இந்த கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றதா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்டெல் குழு (cartel gunman) மெக்ஸிகோவில் பல ஆண்டுகளாக இது போன்ற சமூகக் கூட்டங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். 2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 4,20,000 த்துக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் போதைப்பொருள் தொடர்பான வன்முறைச் சுழலில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடியவர்களை தேடும் பணிகளும் காவல் துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.