ஒரு ஸ்பூன் மூலமே தோண்டப்பட்ட சுரங்கம்.. சிறையில் இருந்து தப்பிய 6 கைதிகள்..!
இந்த சம்பவத்துக்கு முன்னதாகவே, இந்த ஆறு கைதிகளையும் "மிகவும் ஆபத்தானவர்கள்" என்று இஸ்ரேலிய சிறைச்சாலை வகைப்படுத்தியிருந்தது
இஸ்ரேல் நாட்டின் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையில் உள்ள ஆறு பாலஸ்தீன கைதிகள் 'ஷாஷாங் ரிடம்ப்ஷன்' திரைப்படத்தில் வருவதைப் போன்று தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கழிப்பிடத்தில் துருப்பிடித்த ஸ்பூன் மூலம் சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
This is the opening of the tunnel through which six #Palestinian political prisoners managed last night to escape from the high-security Israeli prison of Gilboa in the north of occupied #Palestine. pic.twitter.com/S32TvhpQ3s
— HudaFadil (@HudaFadil9) September 6, 2021
கழிப்பிடத்தில் இருந்து சிறையின் சுற்றுச்ச் சுவருக்கு வெளியே உள்ள சாலை வரை நிலத்துக்கு அடியில் சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, தற்போது சிறையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை சிறை அதிகாரிகள் தீவிரப்படுத்திவருகின்றனர். மேலும், சிறையில் உள்ள மற்ற திறந்தவெளி சுரங்கங்களை கண்டறிந்து அழிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
தப்பிச்சென்ற கைதிகளில் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும், பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் முன்னாள் ஃபதா கட்சித் (Fatah party) தலைவர் ஜகாரியா ஜுபைடி-ம் அடங்குவர். சந்தேகத்திற்குரிய நபர்கள் வயல்கள் வழியாக ஓடுவதை விவசாயிகள் பார்த்த பின்னரே சிறையில் இருந்து ஆறு பேரும் தப்பியது சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு முன்னதாகவே, இந்த ஆறு கைதிகளையும் "மிகவும் ஆபத்தானவர்கள்" என்று இஸ்ரேலிய சிறைச்சாலை வகைப்படுத்தியிருந்தது. குறிப்பாக, அவர்களில் மூன்று பேரை "தப்பிச் செல்ல வாய்ப்புள்ளவர்கள்" என்றும் அடையாளம் கண்டிருந்தது.
இஸ்ரேலிய நாளிதழான ஹாரெட்ஸ்(Harteez), கில்போவா சிறைச்சாலை கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்று சிறைச்சாலையின் கட்டடக்கலை வரைபடத்தை பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் ஆன்லைனில் பகிர்ந்ததாக குற்றம் சாட்டியது. இந்த தப்பிப்பு சம்பவத்தில் வரைபடத்தின் பங்கு குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பாதுகாப்பு குறைபாடு மிகவும் கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தப்பித்த சிறைக்கைதிகள் ஆறு பேரும் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரத்தை நோக்கி பயணப்படலாம் என்று நம்பப்படுகிறது. இதனையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளை இஸ்ரேலிய காவல்துறை அமைத்துள்ளது. இஸ்ரேலிய அதிரடிப் படைகள் ஜெனின் நகரைச் சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஜெனின் நகரில் வாழ்ந்து வரும் கைதிகளின் குடும்பங்களை "துன்புறுத்துவதாக" பாலஸ்தீன செய்தி நிறுவனம் Maan தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன கைதிகள் ஆதரவு மற்றும் மனித உரிமைகள் சங்கமான அடாமீர் (Addameer) தப்பியோடிய கைதிகளின் ஏழு குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படை சிறைக்காவலில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியது.