இந்திய வகை கொரோனா பரவலா? பள்ளிகளை மூடுகிறது சிங்கப்பூர் அரசு..
சிங்கப்பூர் நாட்டில் இந்திய வகை கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் மே19 தொடங்கி 28 வரை பள்ளிகள் மூடப்படுகின்றன.
இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் சிங்கப்பூரில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குழந்தைகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் வரும் 19-ஆம் தேதி முதல் 28ம் தேதி (மே 19 - 28) வரை பள்ளிகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அங்குள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஜூனியர் கல்லூரிகள் மூடப்படுகின்றன.
கடந்த 8 மாதங்களுக்குப் பின்னர் சிங்கப்பூர் நகரத்தில் ஒரே நாளில் 38 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டியூஷன் மையத்தில் இருந்த குழந்தைகளுக்கு அதிகளவில் தொற்று ஏற்பட்டதால் அதுதான் தொற்றின் மையப்புள்ளி என அந்நாட்டு அரசு கணித்திருக்கிறது. இது குறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கூறுகையில், "B.1.617 இந்திய வேரியன்ட் இங்குள்ள சில குழந்தைகளைத் தாக்கியிருக்கிறது. இவ்வகை கரோனா பொதுவாகவே குழந்தைகளை அதிகளவில் தாக்குகிறது. இதன் பரவும் தன்மை மிகமிக அதிகம்" என்றார். அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் சான் சுன் சிங் "இது மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய விஷயம். ஆனால், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாரும் மோசமான நிலைக்குச் செல்லவில்லை என்பது ஆறுதல். 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், இந்திய வேரியன்ட் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அங்கு மே 19 தொடங்கி 28 வரை பள்ளிகள் மூடப்படுகின்றன. சிங்கப்பூரைப் போல் தைவானும் வரும் மே 28-ஆம் தேதி வரை பள்ளிகளை மூடுவதாக அறிவித்திருக்கிறது.
ஹாங்காங்குடனான பயணத்தில் பாதிப்பு:
சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதால் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஹாங்காங் நாட்டுக்கு தனிமைப்படுத்துதல் இல்லாத பயணத்தில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. மே 26-ஆம் தேதி முதல் இத்தகையப் பயணத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் இதுவரை 61,000 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. 31 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் இதுவரை 16 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.