காமெடியன் Vs உளவாளி : ரஷ்யா- உக்ரைன் போருக்கு காரணமான 2 பேர்!
உலக நாடுகளின் கண்டனங்கள், எதிர்ப்புகள், வேண்டுகோளையும் மீறி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இரண்டாவது நாளாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர்த்தொடுத்துள்ளது. 2வது நாளாக ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. 90 களில் சோவியத் யூனியன் சிதறுண்ட போது உக்ரைன் தனியாக பிரிந்து வந்ததிலிருந்தே ரஷ்யா அந்நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. அங்கு தனது சொல்படி இயங்கும் பொம்மை ஆட்சியை நிறுவ ரஷ்யா முயன்றது. 2014ம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக அங்கு ரஷ்யாவின் பொம்மை ஆட்சியின் அரசின் அதிபராக இருந்ததாக கூறப்பட்ட ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் பதவியிலிருந்து கீழே இறக்கப்பட்டார். அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் அதிபராக பெட்ரோ பொரோஷென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு தீவிர ரஷ்ய எதிர்ப்பாளர். அதன் பிறகு தனது ஆட்டத்தை ஆரம்பித்து அவ்வபோது உக்ரைனை சீண்டி வந்தது ரஷ்யா. தொடர்ந்து 2019ம் ஆண்டு உக்ரைன் அதிபராக Zelensky தேர்வானார்.
ஒரு ரஷ்ய எதிர்ப்பாளர் தோல்வியடைந்து செலன்ஸ்கி வெற்றி பெற்றதை வரவேற்றது ரஷ்யா. அப்படி வரவேற்றதற்குபின் வலுவான காரணத்தையும் வைத்திருந்தார் புதின். செலன்ஸ்கி அடிப்படையில் ஒரு காமெடியாளர். இவருக்கு பெரிதாக அரசியல் தெரியாது. 2018 வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்களில் காமெடி செய்து வந்தார். நெட்ஃப்லிக்சிலும் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். அவரது ‘Servant of the People’ எனும் நிகழ்ச்சி மக்களிடத்தில் பிரபலமானது. அதில் பள்ளி ஆசிரியராக நடித்திருப்பார். அந்த ஷோவில் அவருடைய மாணவர்களால் வெளியிடப்படும் இவரது வீடியோ வைரலாகி எதிர்பார்க்காதவிதமாக அவர் நாட்டின் அதிபராகி விடுவார். அதே தான் அவரது நிஜ வாழ்க்கையிலும் நடந்தது. அவருடைய காமெடி மக்களிடத்தில் பிரபலமானது. அதை வைத்தே 2018ல் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் நின்ற அவர் பிரச்சாரத்திலும் அரசியல் பேசாமல் ஆளும் அரசை கிண்டலடித்து பேசி வந்துள்ளார். மக்களை கவர்ந்த அவர் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அரசியல் தெரியாத அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டபோது உக்ரைன் மக்களிடத்தில் அச்சமும் மேலோங்கியது. அவரை முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலி முன்னாள் அதிபர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோருடன் ஒப்பிட்டு பேசினர். புடின் ரஷ்ய அதிபராவதற்கு முன்பு 16 ஆண்டுகள் கேஜிபி எனும் உளவு அமைப்பில் உளவாளியாக பணியாற்றினார். அந்த சமயத்தில்தான் நாடு முழுக்க அரசியலை தீவிரமாக கற்றுக்கொண்டார். பின் கேஜிபியிலிருந்து விலகி 1991 அரசியலுக்கு வந்தார். 1999ல் அதிபர் ஆன புடின் தற்போதுவரை ரஷ்யாவின் அதிபராக உள்ளார்.
இப்படி அரசியலில் பழம் தின்று கொட்டைப்போட்ட புடினுக்கும், அரசியல் பெரிதாக தெரியாத செலன்ஸ்கிக்கும் இடையேதான் ரஷ்யாவும் உக்ரைனும் சிக்கி இருக்கிறது. தற்போது நாட்டோ நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டுவதை ரஷ்ர்யா விரும்பவில்லை. நாட்டோவில் உக்ரைன் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு செக்மேட்டாகும் என்பதால், பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது, இது வாழ்வா, சாவா போராட்டம், அதனால் போர் என அறிவித்து தாக்குதலை தொடர்ந்து வருகிறார் புதின். உலகம் கவனித்து வருகிறது!