ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரப்போகும் இந்தியா! எப்படி தெரியுமா?
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இந்தியாவில் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா, அவர்களின் அண்டை நாடான உக்ரைனுடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரு நாடுகளின் யுத்தம் காரணமாக உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்:
கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலையில் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உலகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் – ரஷ்யா இடையே போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இரு தரப்பிலும் இதுவரை ஆயிரக்ணகக்கான அப்பாவி மக்களும், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக, ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. ஆனால், அந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்தியாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை:
இந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிற்கு மிகவும் நெருக்கமான நட்பு நாடாக திகழும் இந்தியாவின் பிரதமர் மோடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்ரைனுக்குச் சென்றிருந்தார்.
உக்ரைனுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியிடம் இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் என்றும், போரை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனால், ஜெலன்ஸ்கி இந்தியாவின் முன்னிலையில் ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறப்படுகிறது. மேலும், உக்ரைன் செல்வதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவிற்குச் சென்றிருந்த பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினிடமும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உலக தலைவர்கள் மத்தியில் தனி செல்வாக்கை கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, உக்ரைன் – ரஷ்யா போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டால் உலக தலைவர்கள் மத்தியில் இந்தியாவிற்கும், பிரதமர் மோடிக்கும் மிகப்பெரிய செல்வாக்கு உண்டாகும் என்றும் கருதப்படுகிறது. மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் சரிந்த பா.ஜ.க.வின் செல்வாக்கையும், மோடியின் செல்வாக்கையும் இதன் மூலம் மீண்டும் அதிகரிக்கலாம் என்றும் பா.ஜ.க. நம்புவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.