"உக்ரைனில் போர் நிறுத்தத்துக்கு தயார்" - கண்டிஷன் போட்ட ரஷிய அதிபர் புதின் - என்னவா இருக்கும்?
போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்திருப்பது போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 21 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. போரின் நடுவே, பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அந்நாடு மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது.
ரஷிய - உக்ரைன் போர்:
இந்த நிலையில், போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்திருப்பது போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. போரில் கைப்பற்றிய பகுதிகளை தாங்களே வைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டால் போர் நிறுத்தத்துக்கு தயார் என புதின் கூறியிருப்பதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷிய அரசுக்கு நெருக்கமான இரண்டு அதிகாரிகள் பேசியதை மேற்கோள் காட்டி தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷிய அதிகாரிகளை சந்தித்த சர்வதேச அதிகாரி, "போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் தயாராக உள்ளனர். அவர்கள் போர்க்களத்தில் கைப்பற்றிய இடத்தில் வைத்து கொள்ள விரும்புகிறார்கள்.
ரஷியாவின் உண்மையான நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் புதின் வெறிபிடித்து திரிகிறார். இயல்பு வாழ்க்கையைத் தொடர பெரும்பாலான ரஷியர்கள் ஆர்வமாக உள்ளார்கள். பல ஆண்டுகளாக ரஷியாவை போருக்கு தயார்படுத்தும் அதே வேளையில், அதை முடிவுக்கு கொண்டு வர அவர் தயாராக இருப்பது தெளிவாக தெரிகிறது. ஒரு மீட்டர் நிலதத்தில் இருந்து பின்வாங்கக் கூட புதின் தயாராக இல்லை" என்றார்.
போர் நிறுத்தத்துக்கு கண்டிஷன் போட்ட ரஷிய அதிபர் புதின்:
புதின், போர் நிறுத்தம் கோருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய ரஷிய அதிகாரிகள், "முடிவு இன்றி தொடரும் உக்ரைன் போர், உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரால் ஏற்பட்ட விளைவுகள், காசாவில் நடந்து வரும் போரால் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவையே காரணங்கள்" என்றார்கள்.
போர் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் நிபந்தனை விதித்ததாக வெளியாகியுள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "நீங்கள் சொன்ன இந்த தகவல்கள் தவறானவை. புதின், உண்மையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார். இதை, அவரே கூறியுள்ளார். ரஷியா தயாராக உள்ளது. ஆனால், அதன் சொந்த இலக்குகளை அடைவதற்காக மட்டுமே" என்றார்.
கடந்த செவ்வாய்கிழமை ராணுவ தளபதிகளுக்கு புதின் ஆற்றிய உரையில், "போரில் ரஷியாவின் இலக்குகள் மாறவில்லை. ரஷியாவின் துருப்புக்கள் அவர்கள் விரும்புவதை செய்வதால் உக்ரைன் குழப்பமாக உள்ளது. நமக்குரிய நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்றார். போர் நிறுத்தம் வேண்டும் என ஓராண்டுக்கு முன்பே புதின் தெரிவித்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.