Russia-Ukraine Conflict: ரஷ்யா - உக்ரைன் எல்லையில் நடப்பது என்ன? மாறி மாறி குற்றம்சாட்டும் அமெரிக்கா, ரஷ்யா..!
ஐரோப்பாவில் அதிகளவில் அமெரிக்கா படைகளை குவிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் நாடுகள் இடையே அண்மை காலங்களில் மிகவும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இருநாட்டின் எல்லை பகுதிகளிலும் அதிகளவில் படையில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த இரு நாடுகளிடையே போர் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா தீவிரமாக எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பாவில் அதிகளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாக ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 2000 அமெரிக்க படைகள் வடக்கு கரோலினாவிலிருந்து போலாந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர ஜெர்மனியில் 1000 அமெரிக்க படைகள் உள்ளன. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மீது ரஷ்யா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதற்கு அமெரிக்கா தரப்பில், “ரஷ்ய அரசு உக்ரைன் நாட்டிலிருந்து போலியாக ஒரு தாக்குதலை நடத்தி அதை காரணம் காட்டி உக்ரைன் மீது போர் தொடுக்க உள்ளது. இதற்காக தான் அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதி எல்லையில் நிரப்பப்பட்டுள்ளது தொடர்பான செயற்கைகோள் படங்கள் வெளியாகியுள்ளன. எனினும் உக்ரைன் நாட்டின் மீது எந்தவித போரும் ரஷ்ய தொடுக்கவில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதன்காரணமாக அந்தப் பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
மேலும் பெலாரஷ்யா நாட்டிலும் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளது தொடர்பான வீடியோ கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியானது. உக்ரைன் நாட்டின் தலைநகர் கியிவ் பெலாரஷ்யா நாட்டு எல்லையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆகவே அங்கு ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளது ஒரு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் பிரச்னை என்ன?
உக்ரைன் நாடு 1991ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பின்னர் தொடர்ந்து அங்கு உக்ரைன் நாட்டு அரசிற்கு எதிராக அவ்வப்போது கிளர்ச்சியாளர்கள் இருந்து வந்தனர். எனினும் தொடர்ந்து அங்கு ரஷ்யாவின் தலையீடு இருந்து கொண்டே வந்தது. 2005ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபராக வந்த விக்டர் யெஸ்சென்கோ ரஷ்யாவின் தலையீடுகளிலிருந்து உக்ரைன் நாட்டை முழுவதும் விடுபட வைப்பதாக கூறினார். 2010ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் இடையே ஒரு எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்தானது.
2013ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டு உடனான பொருளாதார வர்த்தகத்தை உக்ரைன் நாட்டு அதிபர் நிறுத்தினார். இதன்காரணமாக அங்கு தெற்கு பகுதியில் கடும் கிளர்ச்சி உருவானது. இதைத் தொடர்ந்து நாட்டின் தெற்கு பகுதியான கிரீமியாவை 2014ஆம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஆக்கிரமித்து ரஷ்ய கொடியை ஏற்றினர். அதன்பின்னர் கிரீமியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவாளார்கள் அதிகம் உள்ளனர். அந்தப் பகுதியில் உக்ரைன் நாட்டு அரசு அமைதியை சீர்குலைக்கும் விதகமாக கடந்த சில மாதங்களாக நடந்து வருவதாக ரஷ்ய குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு காரணம் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் அந்நாட்டு அரசு ஒரு டிரோனை பயன்படுத்தியது. இது தான் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் மூழும் சூழல் உருவாக தொடக்க புள்ளியாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க:அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டார் : அதிபர் பைடன் அறிவிப்பு