Russia Nuclear Drill : உக்ரைன் அரசு வெடிகுண்டுத் தாக்குதல், அணு ஆயுத போர்ப் பயற்சியை தொடங்கிய ரஷ்யா
இந்த போர்ப் பயிற்சியில் ரஷ்யாவின் விமானம் தாங்கி கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், கடல் ரோந்து விமானம் உள்ளிட்டவை பங்கேற்றதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது
உக்ரைன் உடனான போர் பதற்றங்களுக்கு மத்தியில், அணு ஆயுத போா்ப் பயிற்சியை ரஷியா மேற்கொண்டது. இந்த பயிற்சியின்போது, அதிவேக ஏவுகணை மற்றும் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த போர்ப் பயிற்சியில் ரஷ்யாவின் விமானம் தாங்கி கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், கடல் ரோந்து விமானம் உள்ளிட்டவை பங்கேற்றதாக தெரிவத்துள்ளது.
இந்த போர்ப் பயிற்சியை, பெலராஸ் நாட்டின் அதிபர் அலெக்சாந்தர் கிரிகோரியெவிச் லுக்கசேங்கோ மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் "Situation Centre" என்ற மையத்தில் இருந்து கண்காணித்ததாக தெரிவித்திள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் நுழைந்து எந்நேரமும் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க எச்சரித்துள்ளது. முன்னதாக, எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நிலப்பகுதியில் இரண்டு குண்டுகள் பாய்ந்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ரோஸ்டோவ் பகுதியில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தகவலை உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் முற்றிலும் மறுத்துள்ளார். ராக்கெட் குண்டுகள் ரஷ்ய எல்லையைத் தாக்கவில்லை. இந்த விவகாரத்தில், சர்வதேச விசாரணையை நாங்கள் கோருகிறோம். இதுபோன்ற தவறான தகவல்கள் மூலம் படைக்குவிப்பை ரஷ்யா அதிகரித்து வருகிறது. வான் மற்றும் கடல்வழி தாக்குதலையும் தீவிரப்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆதரவு கிளர்சியாளர்கள் வாழும் தோனெத்ஸ்க் நகரின் (டான்பாஸ் - donbas பிராந்தியம்) மீது உக்ரைன் அரசு தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, தோனெத்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து மக்கள் கூட்டம் கூடமாக ரஷ்யா எல்லைப் பகுதிக்கும் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
எல்லைப் பகுதியில் உக்ரைன் அரசின் செயல்பாடுகளால், ஒட்டுமொத்த ரஷ்ய மக்களும் வேதனையும் கோபமும் அடைந்திருப்பதாகவும் முன்னதாக விளாடிமிர் புதின் குறிப்பிட்டார்.
உக்ரைன்- ரஷ்யா மோதலின் மையப்புள்ளியாக 'தோனெத்ஸ்க்' விவகாரம் விளங்குகிறது. தோனெத்ஸ்க் பிராந்தியத்தில்,75%க்கும் அதிகமானோர் ருசிய மொழியைப் பேசுகின்றனர். மேலும், தங்கள் தனித்துவ அடையாளங்களைக் காப்பாற்ற அரசியல் மட்டத்தில் தன்னாட்சி கோரி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு, உக்ரைன் இராணுவத்திற்கும், தோனெத்ஸ்க் பிரிவினைவாதிகளுக்கு இடையே மோதல்கள் அதிகரித்தது. இந்த சண்டையில், இருதரப்புமே அதிக அளவில் உயிரிழப்புகளை சந்தித்ததாக கூறப்படுகிறது. இறுதியில், 6000க்கும் மேற்பட்ட ராணுவப்படைகளுடன் களமிறங்கிய ரஷ்யா மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த சண்டையில் உக்ரைனிய அரசு பெருத்த அவமானத்தைச் சந்தித்தது. அவர்களின், தன்னம்பிக்கை சிதைத்தது. இருந்தாலும், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக மின்ஸ்க் I- ஒப்பந்தம் கையெழுத்தானது. இது, தற்சமயமாக போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்ததோடு, பிரிவினைவாதிகளுக்கும்- உக்ரைன் அரசுக்கும் இடையே நிர்மாணிக்கப்பட்ட நடைமுறைகள் மூலமாக ஒருமித்த கருத்துகளை உருவாக்கும் முயற்சிகளை மேம்படுத்தி தந்தன.
இதில், உள்ள சில குறைபாடுகளை களையும் பொருட்டு, அப்போதைய ஜெர்மனி அதிபர் ஏஞ்சல மெர்கலின் தீவிர முயற்சியால் மின்ஸ்க்- II ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் விவகராத்தில், பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளின் தலையீடு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?