Marco Rubio: அட போங்கப்பா, எங்களுக்கு வேற வேலை இருக்கு.. ரஷ்யா-உக்ரைன் சமரசத்திலிருந்து அமெரிக்கா எஸ்கேப்?
ரஷ்யா-உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துவரும் அமெரிக்கா, விரைவில் அதிலிருந்து விலகும் என்பதுபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ சூசகமாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த, அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், சவுதி அரேபியாவில் முகாமிட்டு, இருநாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். இந்நிலையில், பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் விரைவில் ஏற்படாவிட்டால், அமெரிக்கா விலகிக்கொள்ளும் என்பதுபோல், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
வருடக்கணக்கில் தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர்
கடந்த 2022-ம் அண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியது ரஷ்யா. அதைத் தொடர்ந்து, உக்ரைனும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பின், உக்ரைனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கடுமையாக சாடிய ட்ரம்ப், போர் நிறுத்தத்தை அவர் விரும்பவில்லை என குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டிவரும் ட்ரம்ப், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக ஸ்டீவ் விட்காஃபை தூதராக நியமித்து, சவுதி அரேபியாவில், இரு நாட்டு பிரதிநிதிகளுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இழுபறியில் இருக்கும் ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை
ரஷ்யா-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை சில மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இன்னும் சம்மதிக்கவில்லை. உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒரு வழியாக ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்திருந்தாலும், ரஷ்யா அதற்கு ஒப்புக்கொள்ளாமல், தொடர்ந்து உக்ரைனை தாக்கி வருகிறது.
இந்நிலையில், இன்று பிரான்சில் ஐரோப்பிய மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவாத்த்தை நடத்தியபின் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, சில நாட்களுக்குள் இந்த பேச்சுவார்த்தைக்கு முடிவு எட்டப்படாவிட்டால், இதிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
மாதக்கணக்கில் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பவில்லை என்றும், அடுத்த சில வாரங்களில் அல்ல, சில நாட்களிலேயே முடிவு தெரிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி சில நாட்களில் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டால், நாங்கள் இந்த சமரச முயற்சிக்குள் இருப்போம், அப்படி இல்லையென்றால், அமெரிக்காவிற்கு வேறு வேலைகளும் உள்ளன, அதில் கவனம் செலுத்தப் போய்விடுவோம் என்று கூறினார்.
ஏற்கனவே, சவுதி அரேபியாவில், மார்கோ ரூபியோ மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர், ரஷ்ய அதிபர் புதினுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும், போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா உடன்படவில்லை. இந்நிலையில், பிரான்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, அடுத்த வாரம் லண்டனில் பேச்சுவார்த்தை நடைபெற்ற உள்ளது. அதில் மார்கோ ரூபியோ கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

