தொடர் இழுபறி...குடியரசு கட்சியில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்...அமெரிக்க சபாநாயகர் தேர்வில் ட்விஸ்ட்..!
குடியரசு கட்சியினர் மத்தியில் தொடர் உள்கட்சி மோதல் நிலவி வந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குடியரசு கட்சியினர் மத்தியில் தொடர் உள்கட்சி மோதல் நிலவி வந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
அமெரிக்காவில் அதிபர், துணை அதிபருக்கு பிறகு அதிகார மிக்க பதவியான சபாநாயகர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 57 வயதான கெவின் மெக்கார்த்தி போட்டியிட்டார்.
ஆனால், குடியரசு கட்சியில் உள்ள தீவிர வலதுசாரி பழமைவாதிகள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக, கடந்த 160 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சபாநாயகருக்கான தேர்தல் நான்கு நாள்களுக்கு நீடித்தது.
சபாநாயகரை தேர்வு செய்வதற்கான எண்ணிக்கை கிடைக்காததால் 15 முறை வாக்குப்பதிவு நடைபெற்றது. 14 முறையும் தோல்வியே மிஞ்சிய நிலையில், தனக்கு எதிர்ப்பு தெரிவித்த குடியரசு கட்சியின் வலதுசாரி பழமைவாதிகளை சமாதானம் செய்யும் முயற்சியில் கெவின் இறங்கினார்.
இதையடுத்து, அவர்களுக்கு பல சலுகைகளை அளித்து தன் பக்கம் இழுத்ததையடுத்து, 15ஆவது முறையாக நடத்தப்பட்ட தேர்தலில் கேவின் வெற்றிபெற்றார். வெற்றிபெற்றபோதிலும், எந்த வித சுதந்திரமும் இன்றி பழமைவாதிகளின் கட்டுப்பாட்டிலேயே கேவின் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று, குடியரசு கட்சியின் பெரும்பாலான அதிருப்தியாளர்களையும் கேவின் தன் பக்கம் இழுத்தார்.
இருப்பினும், 14ஆவது முறையாக நடத்தப்பட்ட தேர்தலிலும் யாரும் எதிர்பாராத விதமாக அவர் தோல்வியே தழுவினார்.
இதையடுத்து, இன்று காலை 15ஆவது முறையாக நடத்தப்பட்ட தேர்தலில் 216 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சபாநாயகருக்கான தேர்தலின்போது, உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மோசமாக செயல்பட்ட ஒரு குடியரசு கட்சி உறுப்பினரை சக நாடாளுமன்ற உறுப்பினரே கட்டி போடும் அளவுக்கு நிலைமை சென்றது.
குடியரசு கட்சியில் உள்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையிலும், ஜனநாயக கட்சியினர் அனைவரும் தங்களது அதிகாரப்பூர்வ வேட்பாளரான ஹக்கீம் ஜெப்ரிஸ்-க்கு வாக்களித்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக, பிரிதிநிதிகள் சபை, ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தற்போது குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
And so one of the strongest House Speakers in American history is succeeded by what is likely to be one of the weakest.
— Michael Beschloss (@BeschlossDC) January 7, 2023
கடந்த 100 ஆண்டுகளில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஒரு முறைக்கு மேல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை. அதேபோல, அமெரிக்க வரலாற்றிலேயே 12 முறைக்கு மேல் தேர்தல் நடத்தப்பட்டு சபாநாயகரை தேர்வு செய்த சம்பவம் 4 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது.