PM Modi - Thiruvalluvar: உலகிலேயே முதல்முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் - பிரதமர் அசத்தல் அறிவிப்பு..!
PM Modi In Singapore: இந்தியப் பொருளாதாரத்தில் சுமார் 160 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர், இந்தியாவின் முன்னணி பொருளாதார கூட்டாளியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Singapore Thiruvalluvar Cultural Centre: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து உரையாடினார். அங்கு இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் நிலையிலான இரண்டு சுற்று வட்டமேஜை கூட்டமானது நடைபெற்றது.
திருவள்ளுவர் கலாச்சார மையம்:
இந்தியப் பொருளாதாரத்தில் சுமார் 160 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர், இந்தியாவின் முன்னணி பொருளாதார கூட்டாளியாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் விரைவான மற்றும் நீடித்த வளர்ச்சி சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அபரிமிதமான முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார இணைப்பு இந்த உறவுகளின் முக்கிய அம்சம் என்பதை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவின் முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையம் சிங்கப்பூரில் திறக்கப்படும் என்று அறிவித்தார்
பொருளாதார உறவு:
இந்தியா-சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளின் விரிவான மற்றும் ஆழ்ந்த அளப்பரிய வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த உறவை விரிவான உத்திசார் கூட்டாண்மையாக வளரச் செய்ய முடிவு செய்தனர். இது இந்தியாவின் கிழக்கத்திய கொள்கைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என கூறப்படுகிறது.
பொருளாதார உறவுகளில் ஏற்பட்டுள்ள வலுவான முன்னேற்றத்தை கருத்தில் கொண்ட தலைவர்கள், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ராணுவம் மற்றும் பாதுகாப்பு, கடல்சார் விழிப்புணர்வு, கல்வி, செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம், புதிய தொழில்நுட்ப களங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் கூட்டாண்மை ஆகிய துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். பொருளாதார மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் அழைப்பு விடுத்தனர். பசுமை வழித்தட திட்டங்களை துரிதப்படுத்தவும் அழைப்பு விடுத்தனர்.
வட்டமேசை மாநாடு:
2024 ஆகஸ்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற 2-வது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை மாநாட்டின் முடிவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அமைச்சர்கள் நிலையிலான வட்டமேஜை மாநாடு தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று குறிப்பிட்ட தலைவர்கள், இருதரப்பு ஒத்துழைப்புக்கான புதிய செயல்திட்டத்தை அடையாளம் காணவும், விவாதிப்பதிலும் இரு தரப்பிலும் மூத்த அமைச்சர்கள் ஆற்றிய பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Prime Minister @narendramodi met Emeritus Senior Minister Goh Chok Tong in Singapore. Their talks focused on deepening India-Singapore collaboration in a host of sectors. pic.twitter.com/7u8itYTLpP
— PMO India (@PMOIndia) September 5, 2024
அமைச்சர்கள் நிலையிலான வட்டமேஜை மாநாட்டின் போது அடையாளம் காணப்பட்ட ஒத்துழைப்பு அடித்தளமான மேம்பட்ட உற்பத்தி, போக்குவரத்து, டிஜிட்டல் மயமாக்கல், சுகாதாரம் மற்றும் மருத்துவம், திறன் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகளை விரைவுபடுத்த தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். இவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு, குறிப்பாக செமிகண்டக்டர்கள், முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கி நமது உறவுகளை எதிர்காலத்தை சார்ந்ததாக ஆக்குகிறது என்பதை தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
உலகளாவிய விவகாரங்கள் பரிமாற்றம்:
2025-ம் ஆண்டில் இருதரப்பு உறவுகளின் 60 வது ஆண்டு கொண்டாட்டத்தை பற்றியும் அவர்களின் கலந்துரையாடினார்கள். . இந்தியா-ஆசியான் உறவுகள் மற்றும் இந்தோ-பசிபிக் குறித்த இந்தியாவின் பார்வை உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த முக்கியமான பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
செமிகண்டக்டர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் நிலையிலான இரண்டு சுற்று வட்டமேஜை கூட்டங்களில் நடைபெற்ற விவாதங்களின் முடிவுகள் இவையாகும். இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் வோங்கிற்கு பிரதமர் விடுத்த அழைப்பை அவரும் ஏற்றுக்கொண்டார்.