Female Genital Mutilation : பெண் பிறப்புறுப்பு சிதைப்பு கொடிய குற்றம்.. பெண் உரிமைகளை குறித்து போப் பிரான்சிஸ் பேசியது என்ன?
ஆண் ஆதிக்கம் மனிதகுலத்திற்கு கொடியது என்றும், பெண்ணின் பிறப்புறுப்பை சிதைப்பு என்பது நிறுத்தப்பட வேண்டிய குற்றம் என்றும் போப் தெரிவித்துள்ளார்.
பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் தொடர்ச்சியான போராட்டம் என போப் பிரான்சிஸ் நேற்று தெரிவித்துள்ளார். ஆண் ஆதிக்கம் மனிதகுலத்திற்கு கொடியது என்றும், பெண்ணின் பிறப்புறுப்பை சிதைப்பு என்பது நிறுத்தப்பட வேண்டிய குற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பஹ்ரைனுக்கு நான்கு நாள் பயணமாக சென்றுவிட்டு விமானம் மூலம் ரோமுக்கு திரும்பிய போப் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாடிகனில் நிர்வாகப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பெண்களைப் பாராட்டினார். அவர்கள் அங்கு பல்வேறு விஷயங்களை மேம்படுத்தியதாகக் கூறினார்.
ஆனால், பாதிரியார்களாக பெண்களை நியமிக்க வேண்டும் என மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரம் தொடர்பாக போப் எதுவும் தெரிவிக்கவில்லை. பெண் பாதிரியார்கள் விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டதாக போப் மற்றும் அவரது முன்னோடிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
Pope Francis address women's rights on the way back to Rome from #Bahrain: “But why, I ask, do women have to fight like this to keep her rights?” he said. @CarolGlatz reports (📷CNS/Vatican Media) https://t.co/FdoVIBdqpn pic.twitter.com/j5rPEhBGUE
— Catholic News Service (@CatholicNewsSvc) November 7, 2022
ஈரானில் பெண்கள் போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த போப், பெண் உரிமைகள் குறித்து பல கருத்துகளை தெரிவித்தார். வாக்குரிமைக்கான போராட்டம் உள்பட வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்கள் குறித்து பேசிய அவர், "உண்மையைச் சொல்ல வேண்டும். பெண்களின் உரிமைக்கான போராட்டம் என்பது தொடர் போராட்டம்.
பெண்கள் ஒரு வரம் என்பதால் இதற்காக தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. கடவுள் ஆண்களை படைத்து, விளையாடுவதற்காக செல்லப்பிராணியாக பெண்களை படைக்கவில்லை. ஆண், பெண் இருவரையும் சமமாகப் படைத்தார். பெண்கள் அதிக பாத்திரங்களை வகிக்க அனுமதிக்கும் திறன் இல்லாத சமூகம் முன்னேறாது" என்றார்.
ஆண் ஆதிக்கத்தை கண்டித்த போப், தன்னுடைய சொந்த நாடான அர்ஜென்டினா உள்பட உலகம் முழுவதும் அது இன்னும் அதிகமாக இருப்பதாக ஒப்புக்கொண்டார். இந்த பேரினவாதம் மனித குலத்தை கொன்று குவிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த அவர், ””அது ஒரு குற்ற செயல்” என குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம், சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினத்தன்று பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிராக சகிப்புத்தன்மை இருக்க கூடாது என கூறிய கருத்தை அவர் நேற்று மீண்டும் தெரிவித்தார்.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் சுமார் 30 நாடுகளில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு வழக்கம் பின்பற்றப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.