(Source: ECI/ABP News/ABP Majha)
Modi US Visit: முக்கியத்துவம் வாய்ந்த பயணம்.. அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!
இந்த பயணத்தின்போது, முக்கியத்துவம் வாய்ந்த ஜெட் இன்ஜின் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு முறை பயணமாக, பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைந்துள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்:
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகள் - பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டும், கட்சி சார்பற்று, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்ற உள்ள முதல் இந்தியப் பிரதமர் மோடிதான்.
இந்த பயணத்தின்போது, முக்கியத்துவம் வாய்ந்த ஜெட் இன்ஜின் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடிக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான உறவில் அந்த உரை முக்கிய பங்காற்றியதாக அமெரிக்க அதிபர் பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி:
இரு நாட்டின் ஆழமான நெருக்கமான உறவை மீண்டும் உறுதி செய்யும் நிகழ்வாக மோடியின் உரை அமையும் என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, கூட்டு நாடாளுமன்ற அமர்வில் உரையாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மோடி அனுப்பிய பதில் கடிதத்தில், "ஜனநாயக விழுமியங்கள், இரு நாட்டு மக்களிடையே உள்ள நெருக்கமான உறவுகள், உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்காவுடன் உலகளாவிய வியூக ரீதியான கூட்டணி கொள்வதில் பெருமை" என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வாழ் இந்திய மக்கள், பிரதமர் மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் ஜூன் 18ஆம் தேதி அமெரிக்காவின் 20 வெவ்வேறு நகரங்களில் ‘இந்திய ஒருமைப்பாட்டு அணிவகுப்பு’ நடத்தப்பட உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை சிறப்பித்துக் காட்டும் வகையில், ஜூன் 21ஆம் தேதி வெள்ளை மாளிகையின் முன் மாபெரும் கலாச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோடியின் அமெரிக்க பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், "அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் ஜூன் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் இரு நாடுகளின் நல்லுறவில் ஒரு மிக முக்கிய மைல் கல்லாக அமையும். இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு என்பது பிரதமரின் அமெரிக்க பயணத்தின்போது மிக முக்கியமான விசயமாக அமையும். இது பிரதமரின் முதல் அதிகாரப்பூர்வ அமெரிக்க அரசுப் பயணம் ஆகும்" என்றார்.