துருக்கி: உயிரிழந்த மகளின் கையை பிடித்து மீட்புக்காக காத்திருக்கும் தந்தை: மனதை உருக்கும் புகைப்படம்
துருக்கியின் முக்கியப் பகுதியான கஹ்ராமன்மாராஸில் சில படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் பேரழிவை ஏற்படுத்திய இரண்டு நிலநடுக்கங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வைரலாகி வருகின்றன. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 7,800 பேர் பலியாகி உள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் நிமிடத்தில் இடிந்து விழுவதையும் சிலர் கையால் தோண்டி எடுத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வேதனையான வீடியோக்களும் ஆன்லைனில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
சில படங்கள் துருக்கியின் முக்கியப் பகுதியான கஹ்ராமன்மாராஸில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் குறிப்பாக ஒரு புகைப்படத்தில் ஒரு தந்தை தனது இறந்த டீனேஜ் மகளின் கையைப் பிடித்தபடி மீட்புப்பணியாளர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு மீட்புப்பணியாளர்கள் தட்டையான நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டு எடுத்தனர்.
இடிபாடுகளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் மெசுட் ஹான்சர் தனது 15 வயது மகளான இர்மாக்கை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்த கட்டடம் நொறுங்கி இருக்க அதற்கு இடையில் சிக்கி இருக்கும் மகளை மீட்க கையில் ஒருவகையான சுத்தியலுடன் அதன் அருகில் அமர்ந்திருக்கிறார்.
தென்கிழக்கு துருக்கியில் அமைந்துள்ள கஹ்ராமன்மாராஸின் பசார்சிக் மாவட்டம் முதல் நிலநடுக்கத்தின் மையப்பகுதியாகும். முதலில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில மணிநேரங்களுக்குப் பிறகு, 7.7 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் அங்கே பதிவானது.
கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் மற்ற இடங்களில் கிடந்த இடிபாடுகளில் இருந்து இரண்டு குழந்தைகளை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர். இதற்கிடையே பொதுமக்களை அமைதிபடுத்தும் பணிகளிலும் மீட்புப்பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
துருக்கி - சிரியாவை உலுக்கி ரிக்டர் அளவில் 7.8 அளவில் பதிவான நிலநடுக்கம் பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பதிவான மிக மோசமான நிலநடுக்கம் என நில அதிர்வு நிபுணர்கள் கூறுகின்றனர். அனடோலியன் மற்றும் அரேபிய தட்டுகளுக்கு இடையில் 100 கிமீ (62 மைல்) க்கும் அதிகமான தொலைவில் நிலத்தில் பிளவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
பூமியின் மேற்பரப்பின் மேல் என்ன நடந்தது, இதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பதை விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதை, கீழே பார்ப்போம்.
நிலநடுக்கம் எங்கு மையம் கொண்டது..?
துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு திசையில் நில அதிர்வு ஏற்பட்டு மத்திய துருக்கி மற்றும் சிரியாவை நில நடுக்கம் உலுக்கியது.
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, 1970 முதல் மூன்று பூகம்பங்கள் மட்டுமே ரிக்டர் அளவுகோலில் 6.0 க்கு மேல் பதிவாகியுள்ளன. ஆனால், 1822 இல், 7.0 நிலநடுக்கம் இப்பகுதியைத் தாக்கியது. இதில், 20,000 பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது" என்றார்.
எவ்வளவு மோசமான நிலநடுக்கம் இது..?
சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 7.0 ரிக்டர் அளவில் 20க்கும் குறைவான நிலநடுக்கங்களே ஏற்படுகின்றன. இதுகுறித்து விவரித்த இடர் மற்றும் பேரிடர் குறைப்புக்கான லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தலைவர் ஜோனா ஃபாரே வாக்கர் கூறுகையில், "2016 ஆம் ஆண்டு மத்திய இத்தாலியைத் தாக்கி சுமார் 300 பேர் உயிரிழப்புக்கு காரணமான 6.2 நிலநடுக்கத்துடன் ஒப்பிடும்போது, துருக்கி-சிரியா பூகம்பம் 250 மடங்கு அதிக ஆற்றலை வெளியிட்டது. 2013 முதல் 2022 வரை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் இரண்டு மட்டுமே திங்கட்கிழமை நிலநடுக்கத்தின் அளவைக் கொண்டிருந்தன" என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. இந்த மோசமான நிலைநிடுக்கத்தை சமாளிக்க துருக்கிக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிவாரண பொருள்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை செயலாளர், பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதன்படி, தேசிய பேரிடர் மீட்பு படையின் தேடுதல் வீரர்களையும் மருத்துவர்களையும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.