Pegasus | துபாய் இளவரசி லத்தீஃபாவை சிறைவைக்க உதவியதா பெகசஸ் செயலி?
மைக்கேல் நாடு கடத்தப்படுவதற்கு கைமாறாக இளவரசி லத்தீஃபா சிறைபிடிக்கும் முயற்சியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மேற்கொண்டதாக 'தி பிரிண்ட்' செய்தி நிறுவனம் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
இஸ்ரேல் பெகசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 50,000 தொலைபேசி எண்களுடன் கூடிய தரவு தளங்களில் துபாய் நாட்டின் இளவரசி லத்தீஃபா பெயரும் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இவர் தன் தந்தையால் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு, துபாய் ஆட்சியாளர் சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம்-ன் மகளும் நாட்டின் இளவரசியுமான ஷேய்கா லத்தீஃபா, குடும்ப வன்முறை காரணமாக அவர் நாட்டை விட்டு தப்பித்தார். தனது நண்பருடன், துபாயில் இருந்து ஓமன் நாட்டின் எல்லைக்குள் வந்த பின்பு, அங்கிருந்து படகின் மூலம் சர்வதேச கடல் எல்லையில் பயணம் செய்தார். இருப்பினும், இந்தியாவின் கோவா கடற்கரையில் ஒரு இந்திய மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் இராணுவ கூட்டுப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டு மீண்டும் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 3,600 கோடி ரூபாய் மதிப்பில் இத்தாலிய நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த முறைகேட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் 2018ல் துபாய் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
கிறிஸ்டியன் மைக்கேல் நாடு கடத்தப்படுவதற்கு கைமாறாக இளவரசி லத்தீஃபா சிறைபிடிக்கும் முயற்சியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மேற்கொண்டதாக 'தி பிரிண்ட்' செய்தி நிறுவனம் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
பெகசஸ் ஸ்பைவேர்:
இந்நிலையில், ஜூலை 18-ஆம் தேதியன்று, பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்ற உளவுச் செயலியின் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அரசுகளால் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக pegasus Project கூட்டமைப்பு செய்தி வெளியிட்டது. அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்ற பட்டியலில் இளவரசி லத்தீஃபா மற்றும் அவரின் நண்பர் தொலைபேசி எண்களும் இடம்பெற்றுள்ளன. அதிலும், குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இளவரசி லத்தீஃபா துபாயில் இருந்து காணமால் போன சில மணி நேரங்களில் பட்டியலில் அவரது தொலைபேசி எண் சேர்கப்பட்டுள்ளது. மேலும், 2018 காலங்களில் இஸ்ரேல் என்எஸ்ஒ குழுமத்தின் வாடிக்கையாளராக ஐக்கிய அரபு அமீரகம் இருந்ததாக பல்துறை ஆய்வக அமைப்பான சிட்டிசன் லேப் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளவரசி லத்தீஃபாவின் தொலைபேசி தடயவியல் பரிசோதனைக்கு கிடைக்காத காரணத்தினால், தொலைப்பேசி பெகாசஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை. உளவு பார்க்கப்பட்டதாக சந்தேகப்படும் 67 தொலைபேசிகளில் ஆம்னாஸ்ட்டியின் செக்யூரிட்டி லேப் தடயவியல் ஆய்வு மேற்கொண்டது. அதில், 23 தொலைபேசிகளில் வெற்றி கரமாக பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்டதாகவும்,14 தொலைபேசிகளில் உளவு பார்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்[பட்டதாகவும், மீதமுள்ள 30 தொலைபேசிகளில் முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தது.
ஹயா பின்ட் அல்-ஹூசைன் தொலைபேசி :
இதற்கிடையே, லத்தீஃபா சிறைப்பிடித்த ஓராண்டுக்குள், துபாய் ஆட்சியாளரின் ஆறாவதும் மற்றும் இளைய மனைவியுமான ஹயா பின்ட் அல்-ஹூசைன் தொலைபேசி எண்ணும் பெகாசஸ் உளவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை காரணமாக, இளவரசி ஹயா துபாயில் இருந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், தனது முழு சம்மதமில்லாமல் திருமண உறவில் தன்னை ஈடுபடுத்திவருவதாகவும், தனது உயிரை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார்.
இளவரசி ஹயா மற்றும் அவரின் அரை சகோதரி, உதவியாளர்கள், குதிரை பயிற்சியாளர் ஆகியோரின் தொலைபேசி எண்கள், துபாயில் இருந்து தப்பித்த ஒரு வார காலங்களுக்குள் உளவுபார்க்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை போன்ற காரனங்களுக்காக மட்டுமே, பெகசஸ் உளவு செயலி அரசாங்கங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக இஸ்ரேல் அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது. ஆனால், இந்தியா, துபாய் மற்றும் இதர நாடுகளில் இந்த உளவு செயலி தவாறான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்காலம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.