Imran Khan on Bollywood: பாலிவுட் படங்களை காப்பி அடிக்காதீங்கப்பா... இளம் இயக்குநர்களுக்கு பாக்., பிரதமர் அட்வைஸ்..!
அசலுக்கு இருக்கும் மதிப்பு போலிகளுக்கு என்றைக்குமே இருக்காது. எனவே, இளம் இயக்குநர்கள் புதிய சிந்தனைகளை நமது திரைப்படங்களில் பயன்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக்கொண்டார்.
பாலிவுட் படங்களை காப்பி அடிக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் திரைப்பட இயக்குநர்களுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவுரை வழங்கியுள்ளார்.
பாகிஸ்தானில் பாலிவுட் படங்களும் அதிகளவில் வெளியாகும். அங்கு வெளியாகும் திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அந்நாட்டு மக்கள் ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கான் உள்ளிட்ட பிரபல பாலிவுட் நட்சத்திரங்களின் திரைப்படங்களை அதிகம் விரும்பி பார்ப்பார்கள். இதனால், அவர்களுக்கு ரசிகர்களும் ஏராளமானோர் இருக்கின்றனர். பாலிவுட் திரைப்படங்களின் தாக்கத்தால் அந்நாட்டின் இளம் இயக்குநர்களும் பாலிவுட்டின் சாயலில் படம் எடுக்கின்றனர். இதனால், பாகிஸ்தானின் கலாச்சாரம், பண்பாடு போன்றவை குறித்த திரைப்படங்கள் அந்நாட்டில் வெகுவாக குறைந்து வந்தன.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் குறும்பட விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இளம் இயக்குநர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவர் பேசியதாவது, நம் நாட்டை சேர்ந்த இளம் இயக்குநர்கள் இந்தி திரைப்படங்களால் பெரிதும் கவரப்பட்டு உள்ளனர். இதனால், அந்த பாணியிலேயே திரைப்படத்தை எடுத்து தவறு செய்கின்றனர் என்று கூறினார்.
இந்த மாதிரி திரைப்படங்களை எடுப்பது, மற்றொரு நாட்டின் கலாச்சாரத்தை காப்பி அடிப்பதை போன்றதாகும் என்று கூறிய பிரதமர், எனது சொந்த அனுபவத்தில் இளம் இயக்குநர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அசலுக்கு இருக்கும் மதிப்பு போலிகளுக்கு என்றைக்குமே இருக்காது. எனவே, இளம் இயக்குநர்கள் புதிய சிந்தனைகளை நமது திரைப்படங்களில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கூறினார்.
மேலும், தோல்விகளை கண்டு அஞ்ச வேண்டாம் என்று கூறிய பிரதமர் இம்ரான் கான், நம்மை நாம் மதித்தால்தான், இந்த உலகம் நம்மை மதிக்கும் என்றும் கூறினார்.
பயங்கரவாதம் என்றாலே பாகிஸ்தான் தான் என்று கூறப்படும் நிலையில், அந்நாட்டின் மீதான பார்வையை உலகளவில் மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே இம்ரான் கான் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், இம்ரான் கான், அமெரிக்க ராணுவ படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை மாவீரன் என்று கூறி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான், வாய் தவறி பின்லேடனை மாவீரர் என்று கூறிவிட்டதாகவும், ஒசாமா பின்லேடனை பயங்கரவாதியாகவே பாகிஸ்தான் கருதுவதாகவும், அல்கொய்தா இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகவே நாங்கள் கருதுவதாகவும் அந்நாட்டு அமைச்சர் பவத் சவுத்ரி விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
02-05-2011 அன்று பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்க படையினர், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பின்லேடனை சுட்டு வீழ்த்தினர். ஆனால், பின்லேடன் அங்கு பதுங்கியிருந்தது குறித்து தங்களுக்கு தெரியாது என்று பாகிஸ்தான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பொது இடத்தில் உதவியாளருக்கு லிப்லாக்..! கொரோனா விதிகளை மீறியதால் இங்கிலாந்து அமைச்சருக்கு சம்பவம்..!