6 மாதங்களில் 2,439 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை; இதில் 90 பெண்கள் கௌரவக்கொலை - அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தகவல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 6 மாதங்களில் மொத்தமாக 2439 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தகவல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 6 மாதங்களில் மொத்தமாக 2439 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகவும், 90 பெண்கள் குடும்ப கௌரவத்திற்காக கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சாப் மாகாணத்தில் தலைநகர் லாகூரில் 400 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 2300க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நாள் ஒன்றுக்கு 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாவதாகவும், கடந்த 6 ஆண்டுகளில் 22 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றம் கூறுவதால், குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்படாமல், வெறும் 1 சதவிகிதம் குற்றவாளிகளே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த அறிக்கையில், `22 ஆயிரம் வழக்குகளில் வெறும் 77 பேர் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்’ என்று சுட்டிக் காட்டியுள்ளது.
லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் நிடா கிர்மானி இதுகுறித்து, `பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை கலாச்சாரம் பரவியிருப்பது வருத்தத்திற்கு உரியது. ஆண்கள் பொதுவாகவே வன்முறையாளர்கள் எனவும், பாலியல் குற்றங்களுக்குக் காரணம் பெண்களே எனக் குற்றம் சாட்டுவதால் இந்தப் பிரச்னை நிகழ்கிறது. இதனை சரிசெய்ய முயற்சிகளை மேற்கொண்டாலும், இது மிக நீண்ட பணியாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.
லாகூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாகிய தனது திருமணமான சகோதரியைக் கொன்றுள்ளார் நபர் ஒருவர். 5 குழந்தைகளுக்குத் தாயான 28 வயது பாதிக்கப்பட்ட பெண் அவர் வேலை செய்துகொண்டிருந்த பகுதியில் 4 பேரால் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் குடும்ப கௌரவத்தைக் கெடுத்ததாக அவரது சகோதரரே அவரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
உலகிலேயே அதிகளவிலான ஆவணப்படுத்தப்பட்ட, கணிக்கப்பட்ட ஆணவக் கொலைகள் நிகழும் நாடுகளுள் ஒன்று பாகிஸ்தான். கடந்த 2016ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் சமூக வலைத்தளப் பிரபலம் காண்டீல் பாலோச் என்ற பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட படங்களைப் பிடிக்காத காரணத்தால் தனது சகோதரரால் நெறித்துக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் கிம் கர்தாஷியன் என்ற அழைக்கப்படும் காண்டீல் பாலோச் சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான ஃபாலோவர்களைக் கொண்டவர். தன் சகோதரரால் அவர் கொல்லப்பட்டிருக்கும் நிகழ்வு பாகிஸ்தானில் ஆணவக் கொலைகள் பற்றிய விவாதத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டத்தை பாகிஸ்தானின் நீதிமன்றங்கள் கொண்டு வந்துள்ள நிலையில், தற்போதும் பாகிஸ்தானில் ஆணவக் கொலை நிகழ்வதாகக் கூறப்படுகிறது.