Imran Khan: ஆதரவை விலக்கி கொண்ட எம்.கியூ.எம் கட்சி: பெரும்பான்மையை இழந்த இம்ரான்கான் அரசு
பாகிஸ்தான் பிரமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்து வருகிறார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்.இவருடைய டெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சிக்கு முத்தஹிடா குவாமி இயக்க பாகிஸ்தான் கட்சி ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்தக் கட்சி எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பில்வால் பூட்டோ சர்தாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “ஒருகிணைந்த எதிர்க்கட்சிகள் மற்றும் எம்.க்யூ.எம் கட்சி இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை தொடர்பாக விரைவில் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்க உள்ளோம். பாகிஸ்தான் மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
The united opposition and MQM have reached an agreement. Rabta committee MQM & PPP CEC will ratify said agreement. We will then share details with the media in a press conference tomorrow IA. Congratulations Pakistan.
— BilawalBhuttoZardari (@BBhuttoZardari) March 29, 2022
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் தற்போது இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. இந்த தீர்மானத்தில் இம்ரான் கான் அரசை ஆட்சியிலிருந்து விலக்க 172 எம்பிக்களின் ஆதரவு தேவை. தற்போது உள்ள இம்ரான் கான் அரசிற்கு எம்.க்யூ.எம் கட்சி ஆதரவை விலக்கி கொண்டதால் 164 பேர் மட்டுமே ஆதரவாக உள்ளனர். எம்.க்யூ.எம் கட்சியின் ஆதரவுடன் ஒருகிணைந்த எதிர்க்கட்சிகள் 177 பேர் ஆதரவுடன் உள்ளனர். ஆகவே இம்ரான் கான் தலைமையிலான அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைவது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் இம்ரான் கான்,“என்னை ஆட்சியிலிருந்து நீக்க வெளிநாட்டிலிருந்து சிலர் பணம் உதவி செய்து வருகின்றனர். அதன் காரணமாக இந்த சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தேவைப்பட்டால் காட்டவும் தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்