Pakistan Vs Afghanistan: மீண்டும் வாலாட்டும் பாகிஸ்தான்; ஆப்கானிஸ்தான் மீது நேரடி போர்; பாக். அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவாத்தையின் இரண்டாம் சுற்று நடைபெற்றுவரும் நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தார், நேரடி போர் தொடுப்போம் என பாகிஸ்தான் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் மோதல் வெடித்தது. இதில் இரண்டு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், முதல் சுற்று பேச்சுவார்த்தையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு, தற்போது இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், நேரடி போர் நடத்த வேண்டியிருக்கும் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதல் ; முதல் கட்ட போர் நிறுத்தம்
சமீபத்தில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் ஏற்பட்ட மோதலில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மோதலை நிறுத்த, கத்தார் மற்றும் துருக்கி தலையிட்டு, மத்தியஸ்தம் செய்தன. அதற்காக தோஹாவில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில், கடந்த 19-ம் தேதி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
இந்த நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே, துருக்கியின் இஸ்தான்புலில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தான் தரப்பில் அந்நாட்டு உள்துறை துணை அமைச்சர் ரஹ்மத்துல்லா முஜிப் தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முதல் நாளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இஸ்தான்புலில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானுடன் எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால், பாகிஸ்தான் வெளிப்படயான போரை தொடங்கும் என்றும் தங்களுக்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். ஆனாலும், அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை தான் அறிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேற்பார்வை குழுவை விரும்பும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் தொடர்பாக, ஒரு அமைப்பு மேற்பார்வையிடுவதை விரும்புகிறது பாகிஸ்தான். அதன்படி, இரு நாடுகளும் அமைதி ஒப்பந்த விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க, துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் இணைத் தலைமையின் கீழ் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே பாகிஸ்தானின் எண்ணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், தற்போது 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வேளையில், பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





















