Hafiz Saeed Sentenced: மும்பை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீதுக்கு 31 ஆண்டு சிறை
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீதுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீதுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இந்திய வரலாற்றில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் எழுதப்பட்டது. மும்பைக்கு பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக வந்த தீவிரவாதிகள்10 பேர் மும்பையின் வெவ்வேறு நகரங்களுக்கும் பிரிந்து சென்றனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக சண்டையிட்ட பயங்கரவாத தடுப்பு போலீஸ் படைத்தலைவர் ஹேமந்த் கர்காரே, கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் 9 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். அந்த 10 பேரில் அஜ்மல் கசாப் என்ற இளைஞன் மட்டும் உயிருடன் சிக்கினான். அவன் மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டான். அவன் மீது பல ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு புனே எரவாடா சிறையில் அஜ்மல் கசாபுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கசாப் அளித்த வாக்குமூலத்தின் படி இந்தத் தாக்குதலை ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதின் திட்டத்தின் படி 10 பேரு செய்தததாக இந்தியா ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ஹஃபீஸ் சயீது மீதான வழக்கு நடந்துவந்தது. அதில் இறுதியாக ஹஃபீஸ் சயீதுக்கு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹஃபீஸுக்கு 3,40,000 பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஹஃபீஸ் சயீது இவ்வாறாக கைது செய்யப்படுவதும் பின்னர் வெளியில் வருவதும் பாகிஸ்தானில் புதிதல்ல. இது போல் கடந்த 2020ல் ஹஃபீஸுக்கு ஒரு வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஹஃபீஸுக்கு இப்போது 70 வயதாகிறது. அவருக்கு இன்று வழங்கப்பட்ட தண்டனைக்காலம் முடிவதற்கே அவர் 100 வருடம் உயிருடன் இருக்க வேண்டும். அவ்வாறு வாழ்ந்ததால் தான் தண்டனையை அனுபவிக்க முடியும்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற போதுதான் ஹஃபீஸ் சயீது முதன்முறையாக கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அப்போது ட்ரம்ப்பை பார்க்க இம்ரான் கான் அமெரிக்கா பயணப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது ட்ரம்ப் தான் முதலில் ஹஃபீஸ் சயீது கைதை அறிவித்தார். 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஹஃபீஸ் கைது என்று அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் வெளியில் வந்த ஹஃபீஸ் சயீது, இந்தியாவுக்கு எதிராக பலமுறை பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார்.
இதனால் இந்த கைது நடவடிக்கையும் அதுபோலவே நீர்த்துப் போகலாம் என்று கூறப்படுகிறது.