Pakistan: அமெரிக்காவின் 20 அம்ச திட்டம்.. வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர்..நிராகரித்த அமைச்சர்! என்ன நடந்தது?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச காசா அமைதித் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச காசா அமைதித் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கூறியுள்ளார்.
ட்ரம்ப் அறிவித்த திட்டம்:
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். இதில், உடனடி போர்நிறுத்தம், இஸ்ரேலால் பிடிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வது, காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் படிப்படியாக வெளியேறுவது என்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் - காசா இடையேயான போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் ட்ரம்ப்-நெதன்யாகு-வின் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது 20 அம்ச காசா போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியிருந்தார். அதேபோல், இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், ஹமாஸால் பிடிக்கப்பட்ட கடைசி பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படும் போது, "போர் உடனடியாக முடிவடையும்" என்று 20 அம்சத் திட்டம் கூறுகிறது. அந்த ஆரம்ப காலகட்டத்தில், போர் நிறுத்தம் இருக்கும். தற்காலிக சர்வதேச உறுதிப்படுத்துதல் படை மற்றும் ட்ரம்ப் தலைமையிலான ஒரு இடைநிலை அதிகாரத்தை உருவாக்குவது.
இந்த ஒப்பந்தம், ஹமாஸ் போராளிகளை முழுமையாக நிராயுதபாணியாக்க வேண்டும் மற்றும் அரசாங்கத்தில் எதிர்கால பாதிரங்களில் இருந்து விலக்கப்பட வேண்டும். இருப்பினும், அமைதியான சகவாழ்வுக்கு ஒப்புக்கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்பட்டபின், உதவி மற்றும் முதலீடுகளுக்காக எல்லை திறக்கப்படும்.
ட்ரம்பின் முந்தைய வெளிப்படையான இலக்குகளிலிருந்து ஒரு முக்கியமான மாற்றமாக, பாலஸ்தீனியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக, "மக்கள் தங்குவதை ஊக்குவிப்போம். மேலும், சிறந்த காசாவைக் கட்டியெழுப்ப அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் ட்ரம்ப். ட்ரம்பின் இந்த அறிவிப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று இருந்தார் அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-ம் இந்த திட்டத்தை வரவேற்றார்.
ஆதரவை திரும்ப பெற்ற பாகிஸ்தான்:
இச்சூழலில் தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆதரவுடன், காசாவுக்கான டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச அமைதித் திட்டத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார்,”அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட 20 அம்ச கொள்கைகள் எங்களுடையது அல்ல. அதை நான் தெளிவுபடுத்தியுள்ளேன். எங்கள் வரைவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. எனக்கு அதற்கான பதிவு உள்ளது, நாங்கள் இது தொடர்பாக கூறிய சில ஆவணங்கள் அந்த கொள்கைகளில் இல்லை” என்றார். பிரதமர் ஷெபஸ் ஷெரீப்பின் கருத்து பாகிஸ்தான் மக்களிடையே கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் வெளியுறவு அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பாகிஸ்தான், எகிப்து, ஜோர்டன், கத்தார், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ், துருக்கி மற்றும் இந்தோனிசியா ஆகிய நாடுகள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த திட்டத்தை ஆதரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















