Pakistan floods: பாகிஸ்தானில் வெள்ளத்தால் படாதபாடு படும் மக்கள்.. பசியால் உயிரிழந்த 6 வயது சிறுமி..!
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் சுக்கூர் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி பசியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் சுக்கூர் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி பசியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான பருவமழையால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,325 மனித உயிர்கள் மற்றும் 10 லட்சம் கால்நடைகள் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களை இந்த கனமழை மற்றும் வெள்ளம் சேதப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாகாணத்தில் சிந்து மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள பத்னி என்ற பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் பத்னி தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் உள்ள தற்காலிக பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த மோசமான சூழ்நிலையில், நிவாரண உதவிகள் கிடைக்காமல் தற்காலிக மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆறு வயது சிறுமி பட்டினி மற்றும் நோயால் இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில் "எங்களுக்கு உணவு மற்றும் பிற நிவாரண பொருட்களை சரியான நேரத்தில் வழங்காததால் சிறுமி உயிரிழந்தார். அதிகாரிகள் தரவு சேகரிக்க மட்டுமே வந்தனர். வந்த இருவரும் உணவு, கூடாரங்கள், கொசு வலைகள் மற்றும் பிற தேவையான பொருட்கள் போன்ற எந்த நிவாரணப் பொருட்களையும் வழங்கவில்லை. இதனால் பட்டினியால் வாடும் எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கவும் முடியவில்லை. எங்களின் குடும்பங்களை நோய்களிலிருந்து பாதுகாக்கவும் முடியவில்லை" என தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமியின் தந்தை காலித் கோசோ கூறும்போது, ”எங்களது குழந்தை பசியால் தவித்தபோது, ரோரி நகரில் உள்ள முக்தியார்கர் அலுவலகத்திற்கு உதவி கேட்டு சென்றோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு உணவோ, தங்குமிடமோ வழங்கவில்லை. இறுதியில் பசி மற்றும் நோயால் எனது குழந்தை உயிரிழந்துவிட்டாள்” என தெரிவித்தார்.
சிறுமியின் மரணம் குறித்த செய்தி பரவியதும், உள்ளூர் மக்கள் குடும்பத்தை அடக்கம் செய்ய உதவியதுடன், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் பைகளை வழங்கியுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு சிந்து உயர்நீதிமன்றத்தின் சுக்கூர் பெஞ்ச் நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் அலட்சியம் செய்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
2010ல் மழையினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளை விட இந்த ஆண்டு திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுகள் மிக அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தென்மேற்கு பலுசிஸ்தான், சிந்து, தெற்கு பஞ்சாப் மற்றும் வடக்குப் பகுதிகள் ஆயிரக்கணக்கான மக்கள் உண்ண உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிகிறது.