Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்
இந்த நாவலுக்கான 1989ஆம் ஆண்டு ஈரானின் மதத் தலைவர் ஹயதுல்லா ருஹோல்லா கோமேனி சல்மான் ருஷ்டிக்கு பத்வா எனும் மதக்கட்டளையை பிறப்பித்ததுடன் அவரைக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இஸ்லாமியர்களின் பலத்த எதிர்ப்புக்கு ஆளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
’நியாயப்படுத்த முடியாது’
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன் சாத்தானின் வசனங்கள் எனும் இப்புத்தகத்துக்கு கொலை மிரட்டல்களை சந்தித்து வந்த சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் வடக்கு நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையிலேயெ கத்தியால் குத்தப்பட்டார்.
”’தி சேட்டனிக் வெர்சஸ்’நாவல் மீது இஸ்லாமிய உலகில் உள்ள கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது ஆனால் அதனை நியாயப்படுத்த முடியாது” என முன்னதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
75 வயதான சல்மான் ருஷ்டி, கடந்த வாரம் மேற்கு நியூயார்க்கில் உள்ள சௌதாகுவா கல்வி நிறுவனத்தில் ஒரு இலக்கிய நிகழ்வில் லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த ஹாடி மாதர் என்ற 24 வயது நபரால் மேடையில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார்.
’இஸ்லாமியர்களின் கோபம் அவருக்கு புரியும்’
தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ருஷ்டி, ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு தற்போது உடல்நலம் தேறி வருகிறார். இந்நிலையில், சல்மான் ருஷ்டிக்கு நிகழ்ந்த இச்சம்பவம் பயங்கரமானது என்றும் சோகமானது என்றும் பிரிட்டிஷ் நாளிதழான கார்டியனுக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
மேலும், ”ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் ருஷ்டியும் இதனைப் புரிந்து கொண்டார். இஸ்லாமியர்கள் தங்கள் இதயங்களில் நபிகள் மீது வைத்துள்ள அன்பு, மரியாதை குறித்து அவருக்குத் தெரியும். ஆனால் நடந்ததை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது” என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ருஷ்டி பங்கேற்ற காரணத்தால் இம்ரான் கான் பங்கேற்காமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் பிறந்தவர்
ஆங்கில இலக்கிய உலகில் புகழ்பெற்றவரான சல்மான் ருஷ்டி, 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஜூன் மாதம் 19ஆம் தேதி அன்றைய பம்பாயின் பிறந்தார். தன் 14 வயதில் இவர் இங்கிலாந்து சென்ற நிலையில், வளர வளர இஸ்லாத்தின் மீதான நம்பிக்கைகளை துறந்தார். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இவர் எழுத்தாளராக உருவெடுத்த நிலையில், தான் எழுதிய மிட்நைட் சில்ரன் புத்தகத்துக்கு புக்கர் பரிசு பெற்றார்.
தொடர்ந்து 1989ஆம் ஆண்டு வெளியான அவரது 4ஆம் புத்தகமான சாத்தானின் வசனங்கள் எனும் நாவல் தான் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களின் கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானது.
இந்த நாவலுக்கான 1989ம் ஆண்டு ஈரானின் மதத் தலைவர் ஹயதுல்லா ருஹோல்லா கோமேனி சல்மான் ருஷ்டிக்கு பத்வா எனும் மதக்கட்டளையை பிறப்பித்ததுடன் அவரை கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளான சல்மான் ருஷ்டிக்கு பிரிட்டிஷ் அரசு ஆதரவளித்தது. அதேசமயத்தில், சல்மான் ருஷ்டி தனது மனைவியுடன் பிரிட்டிஷ் அரசு உதவியுடன் தலைமறைவு வாழ்வு அளித்தார்.
ஃபத்வா அறிவிப்பு
உலகம் முழுவதும் இருந்து வந்த தொடர் கொலை மிரட்டல்களாலும், பிரிட்டிஷ் உள்ளிட்ட மேலை நாடுகள் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவு அளித்ததாலும் பிரிட்டிஷ் நாட்டிற்கும், ஈரானுக்கும் இடையே இருந்த உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரானின் தெஹ்ரானில் இருந்த பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டது.
தன்னால், இஸ்லாமியர்களுக்கு நிகழ்ந்த கடும் துயரத்திற்கு சல்மான் ருஷ்டி ஆழ்ந்த வருத்தத்தையும் கூறினார். ஈரானின் மதத்தலைவர் ஹயதுல்லா சல்மான் ருஷ்டிக்கு மீண்டும் பத்வாவை பிறப்பித்தார். ருஷ்டிக்கு மட்டுமின்றி சாட்டன் வெர்சஸ் நாவலை வெளியிட்டவர்களுக்கும், விற்பனை செய்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சாட்டன் வெர்சஸ் நாவலை மொழிபெயர்த்த ஹிடோஷி என்ற உதவிப்பேராசிரியர் ஜப்பானியர் டோக்கியோவில் பல்கலைகழகத்திற்கு வெளியே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இத்தாலி மொழியில் மொழிபெயர்த்த எட்டோர் கேப்ரியோலோவும் கத்தியால் குத்தப்பட்டார். இருப்பினும் அவர் உயிர்பிழைத்தார்.
சல்மான் ருஷ்டியின் உயிருக்கு ரூபாய் 3 மில்லியன் வரை பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், 1998ம் ஆண்டு ஈரான் அரசு ருஷ்டிக்கு எதிராக பிறப்பித்த பத்வாவை திரும்ப பெற்றது. அதற்கு பிறகு சல்மான் ருஷ்டி ஏராளமான நூல்களை எழுதினார். 2021ம் ஆண்டு சாட்டன் வெர்சஸ் புத்தகத்தினால் நிகழ்ந்த நினைவுகள் பற்றி நாவலாக வெளியிட்டார்.