India Vs Pakistan: பாகிஸ்தானுக்கு இனிமேதான் இருக்கு.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. இந்தியாவின் சைலென்ட் அட்டாக்...
Indus Water Treaty: பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தம் என்ன.? இந்த முடிவு பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்.? பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், உலகெங்கிலும் இருந்து இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது எவ்வாறு பாகிஸ்தானை பாதிக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன.? | What is Indus Water Treaty
1960-ம் ஆண்டு, செப்டம்பர் 19-ம் தேதி, இந்தியா, பாகிஸ்தானுக்கிடையே நதி நீர் பகிர்வை நிர்வகிக்கும் வகையில் கையெழுத்தான ஒப்பந்தம் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம். உலக வங்கியின் மத்தியஸ்தத்தின் கீழ், 9 வருடங்கள் பேச்சுவார்த்தைக்குப் பின், இந்த ஒப்பந்தத்தில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் எதனால் ஏற்பட்டது.?
சிந்து நதி என்பது, திபெத்தில் தொடங்கி, இந்தியா, பாகிஸ்தான் வழியாக பாய்கிறது. இதன் சில பகுதிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவையும் தொடுகின்றன. இதனால் நீரை பகிர்வதில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், 1948-ல் பாகிஸ்தானுக்கு பாயும் நீரை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் முறையிட்டது.
இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையே மத்தியஸ்தம் செய்து வைக்க, உலக வங்கியை களமிறக்கியது ஐக்கிய நாடுகள் சபை. அப்போது தொடங்கி, பல வருடங்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் என்ன உள்ளது.?
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, கிழக்கு பகுதியில் உள்ள ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், மேற்கு பகுதியில் உள்ள சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் கட்டுப்பாடு பாகிஸ்தான் வசம் இருக்கும்.
இந்த நதி நீர் ஒப்பந்தத்தின்படி, மேற்கூறப்பட்ட நதிகளிலிருந்து கிட்டத்தட்ட 80 சதவீத நீரை பாகிஸ்தானே பெறுகிறது. இந்த நீரைக்கொண்டுதான், பஞ்சாப், சிந்து மற்றும் இதர பகுதிகளில் பாகிஸ்தான் விவசாயம் செய்துவருகிறது. பொதுவாக சொல்லப்போனால், இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளின் நீர் தேவைகளை சமாளிக்க உதவுகிறது.
ஒப்பந்த இடைநிறுத்தம் பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்.?
பாகிஸ்தானின் விவசாயம் உள்ளிட்ட நீர் தேவைகளில் பெரும் பங்கு வகிப்பது சிந்து நதி நீர் தான். பல நதிகளின் சங்கமத்துடன் கூடிய சிந்து நதி வலையமைப்பு, பாகிஸ்தானின் முக்கிய நீர் ஆதாரமாகவும், லட்சக்கணக்கான மக்களின் நீர் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
பாகிஸ்தானின் விவசாயம், அதிலும் குறிப்பாக பஞ்சாப், சிந்து பகுதி விவசாயம் சிந்து நதி நீரை நம்பியே உள்ளது. அது மட்டுமல்லாமல், பாசனம், குடிநீருக்கும் இந்த தண்ணீரையே நம்பியுள்ளது பாகிஸ்தான். அதோடு, பாகிஸ்தானின் தேசிய வருமானத்திற்கு விவசாயம் 23% பங்களிப்பை வழங்குகிறது. மறுபக்கம், கிராமப்புற மக்களின் வருமானம் 68 சதவீதம் விவசாயத்தை நம்பியே உள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 154 மில்லியன் ஏக்கர் அடி தண்ணீரை சிந்து படுகை வழங்குகிறது. இது, பாகிஸ்தானின் விவசாயப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இன்றியமையாததாக இருக்கிறது.
இந்தியா தொடுத்த சைலென்ட் அட்டாக்...
இந்த தண்ணீர் தடைபடும் பட்சத்தில், பாகிஸ்தானில் விவசாயம் பாதிக்கப்பட்டு, அது, அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துவிடும். நீர் இருப்பு குறைந்தால், விளைச்சல் பாதிக்கப்பட்டு, உணவுப் பற்றாக்குறை மற்றும் விவசாய வருமானத்தை நம்பியிருக்கும் கிராமப் பகுதி மக்களையும் பெருமளவில் பாதிக்கும்.
பாகிஸ்தான் ஏற்கனவே, நிலத்தடி நீர் குறைவு, நீர் சேமிப்புத்திறன் குறைவு, நீர் மேலாண்மை பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அந்நாட்டின் மங்லா மற்றும் தர்பேலா போன்ற பெரிய அணைகள் கூட, 14.4 மில்லியன் ஏக்கர்-அடி தண்ணீர் சேமிப்புத்திறனை மட்டுமே கொண்டுள்ளன. இது, ஒப்பந்தத்தில் உள்ள வருடாந்திர நீர் பங்கில் 10 சதவீதம் மட்டுமே. அப்படியானால், மீதம் 90 சதவீத நீர் தேவைக்கு, நேரடி நதி நீரையே பாகிஸ்தான் நம்பியுள்ளது.
இந்த சூழலில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியுள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானுக்கான தண்ணீரை இந்தியா நிறுத்தினால், நீர் பற்றாக்குறையால் விவசாயம், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு, அந்நாட்டின் பொருளாதாரமே பாதிப்புக்குள்ளாகும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும்.
இந்தியாவின் இந்த முடிவு, தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியாகவே கருதப்படுகிறது. ஆயுதத்தை நம்பும் பாகிஸ்தான் மீது, ஆயுதமில்லாத சைலென்ட் அட்டாக்கை இந்தியா தொடுத்துள்ளது என்றே கூறலாம்.

