Fuel Tanker Collision: கோர விபத்து..! வெடித்து சிதறிய எரிபொருள் டேங்கர் - 48 பேர் உயிரிழப்பு, 50 மாடுகள் கருகின
Fuel Tanker Collision: எரிபொருள் டேங்கர் மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், நைஜீரியாவில் 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
Fuel Tanker Collision: எரிபொருள் டேங்கர் மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், நைஜீரியாவில் 50 மாடுகள் உயிரிழந்தன.
வெடித்து சிதறிய எரிபொருள் டேங்கர் - 48 பேர் பலி
மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த நாடு நைஜீரியா. அந்நாட்டில் நைஜர் மாகாணத்தின் அகாயி நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், எரிபொருள் நிரப்பிய டேங்கர் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் இருந்து வந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியுள்ளது. எதிர்பாராத விதமாக, எதிரே வந்த எரிபொருள் டேங்கர் லாரியின் மீது மோதியுள்ளது. இதனால் ஏற்பட்ட தீயால், இரண்டு லாரிகளும் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில் தற்போது வரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயில் கருகிய 50 மாடுகள்:
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து கருகின. இதனால், அந்த உடல்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் மொத்தமாக புதைக்கப்பட்டன. இதனிடையே, விபத்து ஏற்படுத்திய லாரியில் மாடுகள் இருந்தன. நடந்த விபத்தில் சுமார் 50 மாடுகள் எரிந்து கருகின. பயணிகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிய அந்த லாரி, வடக்கு கானோ மாநிலத்தில் உள்ள வுடில் பகுதியில் இருந்து பயணித்ததாக நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடரும் மோசமான விபத்துகள்:
நைஜர் கவர்னர் முகமது உமாரு பாகோ இந்த துயர சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்களிடம் அமைதியாக இருக்கும்படியும், வாகன ஓட்டிகளிடம் "எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும், சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார். நைஜீரியாவில் கடுமையான சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. 2020ல் மட்டும் 1,531 பெட்ரோல் டேங்கர் விபத்துக்கள் ஏற்பட்டதாக நைஜீரியாவின் ஃபெடரல் ரோடு சேஃப்டி கார்ப்ஸை மேற்கோள் காட்டி AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.