Netherland Prime Minister: வரலாற்றில் நீண்டகால பதவி வகிப்புக்குப் பின் ராஜினாமா செய்யும் பிரதமர்..!
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே வருகின்ற நவம்பர் தேர்தலுக்கு பிறகு, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் 5வது முறையாக பிரதமர் பதவிக்கு மார்க் ருட்டே வரும் வாய்ப்பு முடிந்துபோனது.
நெதர்லாந்தில் மார்க் ருட்டே நான்கு கட்சிகளின் கூட்டணியில் பிரதமராக இருந்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு நெதர்லாந்து பிரதமராக பதவியேற்ற மார்க் ருட்டே கிட்டதட்ட 13 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். டச்சு வரலாற்றில் நீண்ட காலமாக பிரதமராக இருந்த பெருமையை பெற்றவர் மார்க் ருட்டே .
பதவி விலக காரணம் என்ன..?
அரசியல் அவதூறுகளைத் தவிர்க்கும் திறனுக்காக 'டெல்ஃபான் பிரீமியர்' என்று அறியப்பட்ட ரூட்டே, தற்போது அரசியல் காரணங்களால் பதவி விலகுகிறார். இடதுசாரி எதிர்க்கட்சிகளும், கீர்ட் வில்டர்ஸ் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சியும் ரூட்டே மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாக்கல் செய்து, ருட்டேவை பிரதமர் பதவியில் இருந்து விலக்க முயற்சி செய்தனர்.
அரசியல் பிளவு ஏன்?
நெதர்லாந்தில் புலம்பெயர்ந்து வருவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ருட்டே இந்த விவகாரத்தில் எவ்வளவோ சமசரம் செய்ய முயற்சித்தும் அனைத்து தோல்விகளை சந்தித்தது. நெதர்லாந்தில் கடந்த ஆண்டு 47 ஆயிரம் மக்கள் புலம்பெயர் அனுமதி கேட்டனர். அதன் தொடச்சியாக இந்தாண்டு 70 ஆயிரமாக அதிகரித்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து புலம்பெயரும் மக்களை கட்டுப்படுத்த மாதத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என பிரதமர் ருட்டே தெரிவித்தார். இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்சி கவிழ்ந்தது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை காபந்து அரசாக இருக்கும் என்றும் அதுவரை பிரதமராக ருட்டேவே தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பிரதமராக யார் வர வாய்ப்பு?
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவுக்கு பிறகு பிரதமாக யார் வரலாம் என்பது பற்றிய தகவல் இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால், ருட்டேவின் முன்னாள் அரசியல் உதவியாளரான சோஃபி ஹெர்மன்ஸ் தற்போது கட்சியின் நாடாளுமன்றப் பிரிவுக்கு தலைமை தாங்குகிறார். அவர் அடுத்த பிரதமராக வர அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் எப்போது?
வரவிருக்கும் தேர்தலின் சரியான தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.