Russia Vs NATO: சொதப்பிய ரஷ்யா, களமிறங்கிய நேட்டோ; போலந்திற்கு பறந்த ரஃபேல் விமானங்கள் - தொடங்கிய ஆட்டம்
ரஷ்யாவின் ட்ரோன்கள் போலந்திற்குள் ஊடுருவியதையடுத்து, ஐரோப்பாவின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையை நேட்டோ தொடங்கியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமீபத்தில், உக்ரைன் மீது ஏவப்பட்ட ரஷ்யாவின் ட்ரோன்கள், தவறுதலாக போலந்து நாட்டின் பல பகுதிகளையும் பதம் பார்த்தன. இதையடுத்து, ரஷ்யாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், உக்ரைன் போரில் முதன் முறையாக நேட்டோ தற்போது களமிறங்கியுள்ளது. அதன் ‘ஈஸ்டர்ன் சென்ட்ரி‘ என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க, போலந்துக்கு ஆதரவாக, பிரான்ஸ் ரஃபேல் விமானங்களை அனுப்புயுள்ளது.
போலந்திற்கு பறந்த ரஃபேல் விமானங்கள்
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலை அடுத்து, போலந்தின் கிழக்கு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஐரோப்பிய பிராந்தியத்தை வலுப்படுத்தும் விதமாக, போலந்திற்கு ரஃபேல் ஜெட் விமானங்களை அனுப்பியுள்ளது பிரான்ஸ்.
போலந்தின் வான் பரப்பை பாதுகாக்கவும், ஐரோப்பாவின் கிழக்கு எல்லையை வலுப்படுத்தவும், 3 ரஃபேல் விமானங்களை அனுப்பியதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார். மேலும், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் ஆகியோருடனும் விவாதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேட்டோவின் ராணுவ நடவடிக்கை என்ன.?
இந்நிலையில், போலந்திற்கு ஆதரவாக தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது நேட்டோ. அந்த அமைப்பு, தனது தரைப்படை மற்றும் விமானப்படையை ஒருங்கிணைக்கத் தொடங்கி இருக்கிறது. தற்போது வரை, டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், தங்கள் படைகளை ஒருங்கிணைக்கத் தொடங்கி இருக்கின்றன.
நேட்டோவில் 32 நாடுகள் உறுப்பினர்களாக இருப்பதால், இந்த நடவடிக்கையில் இன்னும் பல நாடுகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிரமாகுமா உக்ரைன் போர்.?
ரஷ்யாவின் செயலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ரஷ்யாவின் செயல் பொறுப்பற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டா தெரிவித்துள்ளார். நேட்டோ உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய ட்ரோன்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல், நேட்டோ தனது பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்கும் என நேட்டோ தளபதியும், அமெரிக்க விமானப்படை ஜெனரலுமான அலெக்ஸஸ் க்ரின்கோவிச் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
போலந்து சிறிய நாடாக இருந்தாலும், நேட்டோவின் முக்கியமான ஒரு உறுப்பு நாடாகவும், நேட்டோவின் வலுவான ஆதரவாளராகவும் உள்ளது. அதனால் தான், தற்போது போலந்து தாக்கப்பட்ட உடன் நேட்டா களமிறங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமான தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் நேட்டா நுழைந்திருப்பதால், நேட்டோ-ரஷ்யா இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு போர் வெடித்தால், அது மூன்றாம் உலகப் போராக மாறவும் வாய்ப்புகள் உள்ளன. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.





















