Syria Drone Attack: சிரியாவில் ட்ரோன் தாக்குதல்.. 100 மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்..
சிரியா மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ அகாடமி மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 240 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது. ராணுவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின்போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இறந்தவர்களில் ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர்.
A drone attack on a military college in the city of Homs in western #Syria on Thursday killed at least 80 people and injured approximately 240 others, #Syrian Health Minister Hassan Muhammad Al-Ghabash said@100anos_soledad @OskanaShadow @DlugajJuly @NenadicVesna @joiedevivre789 pic.twitter.com/wpdsXsjZJj
— Velerie (@velerie_a) October 5, 2023
உயிரிழந்தவர்களின் 6 குழந்தைகள் உட்பட பொதுமக்களும் ராணுவ வீரர்களும் அடங்குவதாக சுகாதார அமைச்சர் ஹசன் அல் கபாஷ் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. நேற்று பட்டமளிப்பு விழா முடிவடைந்த நிலையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் விழாவை குறிவைத்து தாக்கியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், " சர்வதேச சக்திகளால் ஆதரிக்கப்பட்ட போராளிகள்" தான் தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஹோம்ஸில் நடந்த ட்ரோன் தாக்குதல் மற்றும் வடமேற்கு சிரியாவில் பழிவாங்கும் ஷெல் தாக்குதல் பற்றிய அறிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியின் போது சிரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்துகொண்டதாகவும், தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் புறப்பட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A drone attack Thursday on a Syrian military academy in government-held Homs killed more than 100 people including at least 14 civilians, a war monitor said: AFP
— ANI (@ANI) October 5, 2023
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. "விழா முடிந்ததும், மக்கள் முற்றத்திற்குச் சென்றனர், அப்போது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மூல தாக்குதல் நடத்தப்பட்டது. அது எங்கிருந்து வந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் தாக்குதலுக்கு பின் நொடி பொழுதில் ஏராளமானவர்கள் இறந்து அவர்களது சடலங்கள் தரையில் சிதறிக்கிடந்தது, ” என்று விழா மேடையை அலங்கரித்த நபர் கூறியுள்ளார்.
நேற்று பிற்பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் பகுதியில், குடிமக்கள் கடுமையான குண்டுவீச்சுகளை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். வடமேற்கு சிரியாவில் உள்ள இட்லிப் மற்றும் அலெப்போ கிராமப்புறங்களில் 15-க்கும் மேற்பட்ட நகரங்கள், கிராமங்கள் மீது கனரக பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சந்தைகள், பள்ளிகள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த தாக்குதல்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.