27 ஆண்டு கால திருமண பந்தத்தை முறிக்கும் பில்-மெலிண்டா கேட்ஸ் தம்பதி
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா கேட்ஸ் இடமிருந்து விவாகரத்து பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனம் மைக்ரோசாப்ட். இதை நிறுவியவர்களுள் ஒருவர் பில் கேட்ஸ். இவர் 1970ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் அந்நிறுவனத்தின் உயர்வால் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆக உருவெடுத்தார். இவர் 1987ஆம் ஆண்டு தனது நிறுவனத்தில் பணியாற்ற வந்த மெலிண்டா என்பவரை காதலிக்க தொடங்கினார்.
பின்னர் இருவரும் 1994ஆம் ஆண்டு ஹவாய் தீவில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது ஹவாய் தீவுக்கு வரும் அனைத்து விமானங்களையும் இவர்கள் முன்பதிவு செய்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து மக்களுக்கு தொண்டு செய்ய 2000ஆம் ஆண்டில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் என்று தொண்டு நிறுவனத்தை தொடங்கினர்.
அந்த நிறுவனத்தின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவி செய்தனர். அத்துடன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நோக்கத்தையும் இந்த அமைப்பு முன்னெடுத்தது. 2018ஆம் ஆண்டு வரை இந்த தொண்டு நிறுவனம் 36 பில்லியன் டாலர் வரை உலக நாடுகளுக்கு செலவு செய்தது.
2008ஆம் ஆண்டு முதல் பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார். அப்போது முதல் சமூக சேவை மற்றும் தொண்டு நிறுவனத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தனது மனைவி மெலிண்டா உடன் சேர்ந்து பல சேவைகளை செய்து வந்தார். இந்நிலையில் தற்போது இந்த தம்பதி திருமண பந்தத்தை முடித்து கொள்வதாக அறிவித்துள்ளது.
— Bill Gates (@BillGates) May 3, 2021
இதுதொடர்பாக பில்கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் நீண்ட ஆலோசனைக்கு பிறகு எங்களுடைய திருமண பந்தத்தை முடித்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளோம். 27 ஆண்டுகளில் நானும் மெலிண்டாவும் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். அத்துடன் மக்களுக்கு தொண்டு செய்ய ஒரு தொண்டு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளோம். அந்த நிறுவனத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவோம். எனினும் எங்களுடைய திருமண பந்தம் நீடித்தால் இருவராலும் வளர முடியாத என்பதால் அதை தற்போது முறித்து கொள்கிறோம் ” எனப் பதிவிட்டுள்ளார்.
உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் 124 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளார். ஏற்கெனவே உலகின் நம்பர் ஒன் பணக்காரரான அமேசான் ஜெஃப் பேசோஸ் 2019ஆம் ஆண்டு தனது மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றார். தற்போது பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா கேட்ஸ் இடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.