Watch video: வெடித்து சிதறிய வேன்.. கார்களுக்கு மளமளவென்று பரவிய தீ.! என்னதான் நடந்தது?
இந்த தீ விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
வடக்கு இத்தாலியில் உள்ள மிலன் நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களிலும் திடீரென தீ பரவியது. இதனால், ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த தீ விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆக்சிஜன் வாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற வேனில் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மளமளவென பரவிய தீ:
வாகனங்களில் தீ பரவியது தொடர்பான காட்சிகளை SkyTG24 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதும் அங்கு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதும் அதில் பதிவாகியுள்ளது. தீப்பிடித்த கார்களில் தீ உடனடியாக அணைக்கப்படுவதும் அருகில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்களில் இருந்து புகை கிளம்புவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#BREAKING: Powerful explosion in Milan, Italy after a truck carrying oxygen cylinder explodes setting fire to several vehicles around. pic.twitter.com/A60iMneNUN
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) May 11, 2023
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கிருக்கும் ஆரம்ப பள்ளியில் இருந்தும், குடியிருப்பு கட்டிடம் ஒன்றிலிருந்தும் குழந்தைகள், மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
உலகை உலுக்கும் சம்பவங்கள்:
கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று உலகை ஆட்டிப்படைத்து வந்த நிலையில், இந்தாண்டாவது அதிலிருந்து விடிவு கிடைத்துவிடாதா என்கிற எண்ணத்தில்தான் மக்கள் இருந்தார்கள். ஆனால், இந்தாண்டும் இயற்கை பேரிடர், விபத்து, பயங்கரவாத தாக்குதல்களால் மக்கள் விழி பிதுங்கி வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கும் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த அதிர்ச்சியில் இருந்து விழிப்பதற்குள்ளாகவே அடுத்த அதிர்ச்சி மக்களை தாக்கியது. ஐரோப்பிய நாடான கிரேக்க நாட்டில் வரலாற்றில் இதுவரை நடந்திராத மோசமான ரயில் விபத்து சமீபத்தில் அரங்கேறியது.
பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 36 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 85 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஆறு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பெரும்பாலான ரயில் பெட்டிகள் கடுமையான சேதத்தை சந்தித்து உருக்குலைந்து விட்டது.
கிரேக்க நாட்டில் ரயில்களை நவீனமயமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது.