G7 Summit: 'அரசியல் தடைகளை அகற்ற வேண்டும்..விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' - ஜி7 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி..!
"உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை மையமாகக் கொண்ட ஒரு உள்ளடக்கிய உணவு முறையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்"
முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே Group of Seven என்றழைக்கப்படும் ஜி7. இதில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.
ஜி7 உச்சி மாநாடு:
ஆண்டுதோறும் இந்த மாநாடு 3 நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர். அந்தவகையில், இந்த ஆண்டு ஜி7 உச்சி மாநாடு ஜப்பான் ஹிரோஷிமாவில் நடைபெற்று வருகிறது.
இந்த ஜி7 உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளுடன் இந்தியா, தென்கொரியா, அவுஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு ஆகிய 7 நாடுகள், சிறப்பு அழைப்பின்பேரில் கலந்து கொண்டன.
இந்நிலையில், உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, உணவு, உரம் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் தனது 10 அம்ச செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளடக்கிய உணவு முறையை உருவாக்க அழைப்பு விடுத்தார்.
விவசாயிகள் குறித்து பேசிய பிரதமர் மோடி:
உச்ச மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நுகர்வோர் மூலம் ஈர்க்கப்பட்ட வளர்ச்சி மாதிரியை மாற்ற வேண்டும்.
உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை மையமாகக் கொண்ட ஒரு உள்ளடக்கிய உணவு முறையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, விளிம்புநிலை விவசாயிகள் நம் முன்னுரிமையாக இருக்க வேண்டும். உலகளாவிய உர விநியோகச் சங்கிலிகள் பலப்படுத்தப்பட வேண்டும்.
அரசியல் தடைகள் அகற்ற வேண்டும்:
இதில் உள்ள அரசியல் தடைகள் அகற்றப்பட வேண்டும். மேலும், உர வளங்களை ஆக்கிரமித்து வரும் விரிவாக்க மனப்பான்மை நிறுத்தப்பட வேண்டும். இதுவே நமது ஒத்துழைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்" என்றார். உணவு வீண் ஆக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனக் கூறிய அவர், "இது நம் கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும். நிலையான உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு இது அவசியம். தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவது அவசியம். வளர்ச்சிக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே தொழில்நுட்பம் பாலமாக முடியும்.
புதிய மாதிரி:
வளர்ச்சி மாதிரி அனைவரின் நலனுக்கும் வழி வகுக்க வேண்டும். வளரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடாது. G20 மற்றும் G7 கூட்டமைப்பின் அடுத்தக்கட்ட திட்டத்திற்கான தொடர்பை உருவாக்க இன்று நமது விவாதங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
உலகம் முழுவதும் உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாயத்தின் புதிய மாதிரியை உருவாக்கலாம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பலனை உலகில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.