Kim Jong Un Putin: ஆயுதங்களை வழங்கிய கிம் ஜாங் உன் - சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து குஷிப்படுத்திய புதின், என்ன தெரியுமா?
Kim Jong Un Putin: ரஷ்யாவிற்கு போருக்கான ஆயுதங்களை வழங்கிய வடகொரிய தலைவர், கிம் ஜாங் உன்னிற்கு புதின் பிரத்யேக பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
Kim Jong Un Putin: ரஷ்யாவிற்கு போருக்கான ஆயுதங்களை வழங்கிய வடகொரிய தலைவர், கிம் ஜாங் உன்னிற்கு புதின் 24 குதிரைகளை பரிசாக வழங்கியுள்ளார்.
குதிரைகளை பரிசளித்த புதின்:
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ரஷ்யாவிலிருந்து ஒரு புதிய குதிரைத் தொகுப்பை பரிசாக பெற்றுள்ளார். இது வட கொரியா மற்றும் ரஷ்யா இடையே வளர்ந்து வரும் பிணைப்பை மேலும் நிரூபிக்கிறது. வட கொரியாவுடன் ரயில் இணைப்பைப் பகிர்ந்து கொள்ளும் ரஷ்ய தூர கிழக்கு பிராந்தியமான பிரிமோர்ஸ்கி க்ரையில் உள்ள கால்நடை அதிகாரிகளின் அறிவிப்பின்படி, மொத்தம் 24 குதிரைகள் வடகொரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டன.
கிம் ஜாங்-உன்னிற்கு விருப்பமான ஆர்லோவ் ட்ரொட்டர் இனத்தைச் சேர்ந்த 19 ஸ்டாலியன்கள் மற்றும் ஐந்து மேர்ஸ் குதிரைகள் இந்த தொகுப்பில் அடங்கும் என்று தி டைம்ஸ் தெரிவித்துள்ளது. வட கொரிய தலைவரின் பிரச்சார படங்களில் அடிக்கடி இடம்பெறும் இந்த குதிரை இனமானது 2022ம் ஆண்டிலும் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. உக்ரைனுக்கு எதிரான போருக்காக ரஷ்ய ராணுவத்திற்கு வழங்கப்பட்ட வட கொரிய பீரங்கி குண்டுகளுக்கான, கட்டணமாக இந்த குதிரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவத்தில் குதிரை பிரிவு:
ஜூன் மாதம், புதின் மற்றும் கிம் ஒரு "விரிவான கூட்டாண்மை ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்டனர், இது இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்புக்கு உறுதியளித்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு வட கொரியாவிற்கு தனது முதல் பயணமாக கடந்த ஜூன் மாதம் பியாங்யாங் புதின் சென்றபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதும், கிம் புதினுக்கு உள்ளூர் இனமான ஒரு ஜோடி பங்சன் நாய்களை பரிசாக வழங்கினார். இதற்கு இணையாக ஆகஸ்ட் மாதம் புதின், 447 ஆடுகளை வடகொரியாவுக்கு அனுப்பினார். வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வளர்ச்சி இருந்தபோதிலும், குதிரையேற்ற ராணுவ பிரிவு போன்ற பாரம்பரிய ராணுவ தொழில்நுட்பங்களில் அந்நாடு தொடர்ந்து முதலீடு செய்கிறது.
குதிரைகளை விரும்பும் கிம்:
கிம் குதிரைகளை தனது அடையாளங்களில் ஒன்றாக கருதுகிறார். அவரையும் அவரது குடும்பத்தையும் சுற்றியுள்ள ஆளுமை வழிபாட்டில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. 2018 ஆம் ஆண்டில், அவர் தனது மனைவி ரி சோல்-ஜூ மற்றும் அவரது சகோதரி கிம் யோ-ஜோங்குடன் வட கொரியாவின் புனித மலையான பெக்டு மீது பனி வழியாக குதிரை மீது சவாரி செய்த புகைப்படங்கள் அப்போதே இணையத்தில் வைரலாகின.
வட கொரியாவின் முதன்மையான குதிரையேற்ற மையமான மிரிம் ஹார்ஸ் ரைடிங் கிளப், 386 ஆவணப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் உட்பட, கிம்மின் விரிவான சவாரி வரலாற்றின் கண்காட்சிகளைக் கொண்டுள்ளது. குதிரையேற்றத்தின் முக்கியத்துவம் குறித்த கிம்மின் அறிக்கைகளையும் கிளப் காட்டுகிறது. "இனி போரில் குதிரைகள் பயன்படுத்தப்படாமல் போகலாம், ஆனால் ராணுவத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் கண்ணோட்டத்தில் போர் குதிரை முக்கியமானது. தளபதிகள் குதிரை சவாரி செய்ய வேண்டும். குதிரை சவாரி செய்யும் ஒரு நபர் வலுவான மனநிலையையும் உயர் கட்டளைத் திறனையும் பெறுவார், மேலும் அது உடல் வலிமையுடன் தொடர்புடையது, ”என்று கிம் ஜாங் உன் கருதுகிறார்.