Mayor Apology : குழந்தை பெற்ற பெண்களுக்கு, பூமர் அட்வைஸ் கொடுத்த மேயர்.. கொந்தளித்த பெண்கள்..
சில ஆண்கள் தங்கள் மனைவிகள் "காரணங்கள் இன்றி எரிச்சல் அடைவது", "குழந்தையை கவனித்துக்கொள்வதில் மிகவும் மும்முரமாக இருப்பதால் வீட்டு வேலை செய்ய முடியாதது" போன்ற விஷயங்களால் எரிச்சலடைந்ததாகக் கூறியுள்ளனர்
மனைவிகள் தாயான பிறகு கணவர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் விஷயங்கள் என்ன என்று கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுறுத்தும் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்ட ஒரு ஜப்பானிய மேயர், பொதுமக்கள் கண்டனத்திற்குப் பிறகு மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
தாயான மனைவிகள் கணவனிடம் செய்யக்கூடாதவை என்று நோட்டீஸ்
நம் ஊரில் நகராட்சிகள், மாநகராட்சிகள் உள்ளதுபோல், ஜப்பானில் நகர்கள் மற்றும் அவைகளுக்கென மேயர் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். அப்படி மேற்கு ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள ஓனோமிச்சி நகரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட புதிய தந்தைகள் பற்றிய கணக்கெடுப்புக்கான பதில்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வறிக்கையில், "தந்தைகளிடமிருந்து உங்களுக்கு அறிவுரை" என்ற தலைப்பில் ஒரு பகுதி இருந்தது.
பிரசவத்திற்குப் பிறகு, புதிய தந்தைகள் தங்கள் மனைவிகளின் நடத்தையில் எதை விரும்புகிறார்கள் மற்றும் எதை விரும்பவில்லை என்பதைத் தெரிந்துகொள்வது மனைவிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கும் அதிகாரிகள், அதனை ஒரு அறிவுரையாக பெண்களுக்கு தெரிந்துகொள்ள வெளியிட்டிருந்தனர் என கூறப்படுகிறது. சில ஆண்கள் தங்கள் மனைவிகள் "காரணங்கள் இன்றி எரிச்சல் அடைவது", "குழந்தையை கவனித்துக்கொள்வதில் மிகவும் மும்முரமாக இருப்பதால் வீட்டு வேலை செய்ய முடியாதது" போன்ற விஷயங்களால் எரிச்சலடைந்ததாகக் கூறியுள்ளனர்.
வேரூன்றிய ஆணாதிக்கம்
ஜப்பானிய பெண்கள் நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றிய ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பாலின பழமைவாதங்களுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வாரம் சமூக ஊடகங்களில் இந்த அறிவுரை பகிரப்பட்டபோது ஆவேசமான எதிர்வினை கிளம்பியது. இந்த எதிர்ப்பால் ஓனோமிச்சி மேயர் யுகோ ஹிராடனியை செவ்வாயன்று மன்னிப்புக் கேட்டு நோட்டீஸை திரும்பப் பெற்றதாக நகர அதிகாரி அகிரா தகாஹாஷி செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளார்
மன்னிப்பு கேட்ட மேயர்
"இந்த ஆவணம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்கள் உட்பட குழந்தைகளை வளர்க்கும் அனைத்து பெண்களின் உணர்வுகளுக்கு எதிரானது, பலரை புண்படுத்துகிறது" என்று மேயர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். "அந்த ஆவணத்தில் பாலின அடிப்படையில் வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை ஊக்குவிக்கும் வெளிப்பாடுகள் உள்ளன, எனவே நாங்கள் அதை வழங்குவதை நிறுத்திவிட்டோம். நாங்கள் ஆழ்ந்த மன்னிப்பு கேட்கிறோம்." என்று மேலும் கூறினார். அவர் மன்னிப்பு கேட்டிருந்தாலும், இது தொடர்பான உள்ளூர் ஊடக அறிக்கைகள் காரணமாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் மேலும் தொடர்ந்தன.
வலுத்த எதிர்ப்புகள்
"ஏன் மூத்த தந்தைகள் முதல் புதிய தந்தைகள் வரை என்று ஒரு அறிக்கை வெளியிடவில்லை? மனைவிகளுக்கு பிரசவத்திற்கு முன்பும் பின்பும் கணவர்கள் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்று என்று ஏன் அவர்களுக்கு கற்பிக்கவில்லை?" என்று ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பினார். "இந்த சம்பவத்தால் நகர அலுவலகம் 156 மின்னஞ்சல்கள் மற்றும் 51 தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை ஆவணத்தைப் பற்றிய விமர்சனங்களை வெளிப்படுத்தின. குடும்பப் பிரச்சனைகளைப் பற்றிய பல்வேறு யோசனைகள் மற்றும் எண்ணங்களைத் தீர்க்க தேவையான மாற்றங்களைச் செய்ய, தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நாங்கள் தற்போது மதிப்பாய்வு செய்து வருகிறோம்." என்று தகாஹாஷி கூறினார்.