’நமக்கு நாமே!’ : தங்களுக்காக ஒரு செயற்கை சூரியனையே உருவாக்கிடுச்சு இந்த கிராமம்..! வாவ்!
ஆண்டுக்கு மூன்று மாதங்களை இருளில் கழிக்கும் இத்தாலி கிராமம் ஒன்றில், ஒரு பெரிய கண்ணாடியைப் பயன்படுத்தி, வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருப்பதைச் செயற்கைச் சூரியன் என அந்தக் கிராம மக்கள் அழைக்கின்றனர்.
ஆண்டுக்கு மூன்று மாதங்களை இருளில் கழிக்கும் இத்தாலி நாட்டின் கிராமம் ஒன்று, தங்களுக்குத் தேவைப்படும் அளவில் ’சூரியன்’ ஒன்றைச் செய்துள்ளனர். ஒரு பெரிய கண்ணாடியைப் பயன்படுத்தி, வெளிச்சத்தை கிராமம் மீது பாய்ச்சப்பட்டிருப்பதைச் செயற்கைச் சூரியன் என அந்தக் கிராம மக்கள் அழைக்கின்றனர்.
டிக்டாக் செயலி பயன்பாட்டாளரும் மருத்துவருமான கரண் ராஜன், இத்தாலி நாட்டின் விகனெல்லா கிராமம் குறித்து பதிவிட்டுள்ளார். விகனெல்லா கிராமம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை இருள் சூழ்ந்து இருக்கும். இந்தக் கிராமம் பள்ளத்தாக்கில் அமைந்திருப்பதாலும், இதனைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து இருப்பதாலும் இந்தக் கிராமத்திற்குள் வெளிச்சம் வருவதில் தடை ஏற்படுகிறது.
இதுகுறித்து பேசும் மருத்துவர் கரண் ராஜன், “சூரிய வெளிச்சம் இல்லையென்பதால் இங்கு வாழும் மக்களின் உடலில் செரடானின் சுரப்பது குறைந்துவிடுகிறது. செரடானின் என்பது எச்சரிக்கை உணர்வைத் தூண்டும் ஹார்மோன். இயற்கையான ஒளி கிடைக்காததால், இந்த ஹார்மோன் சுரப்பது குறைந்து விடுகிறது. இது குறைவதால் மக்களின் உணர்ச்சிகள், உறக்கம், ஆற்றல் குறைபாடு ஆகியவை பாதிக்கப்படுவதோடு, குற்ற விகிதமும் அதிகரிக்கிறது” என்கிறார்.
கடந்த 2006ஆம் ஆண்டு, இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 8 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும் கொண்ட ஸ்டீல் தகடு ஒன்று மிக உயரமான மலை ஒன்றின் மீது வைக்கப்பட்டது. இந்தத் தகடு தற்போது கண்ணாடியைப் போல வேலை செய்கிறது. அதன்மீது விழும் சூரிய வெளிச்சம், அந்தக் கிராமத்தின் மத்தியில் விழுவதைப் போல அது கட்டப்பட்டு, பொறுத்தப்பட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டு இதனைக் கட்டும்போது, சுமார் 1 லட்சம் யூரோக்கள் செலவு செய்யப்பட்டதாகக் பிபிசி தளம் கூறுகிறது. இந்தக் கண்ணாடியின் வழியாக விகனெல்லா கிராமத்தின் மீது ஒவ்வொரு நாளும் சுமார் 6 மணிநேரம் வரை வெளிச்சம் பாய்கிறது. இதனால் மக்கள் இயல்பாகப் பிறரோடு பழகுவதும், வாழ்வதும் எளிதாக நிகழ்கிறது என்று கூறுகிறார் மருத்துவர் கரண் ராஜன்.
2008-ஆம் ஆண்டு விகநெல்லா கிராமத்தின் மேயர் பியர்பிரான்கோ மிடாலி இதுகுறித்த பேசியபோது, “இந்தச் செயற்கைச் சூரியன் திட்டம் அறிவியலின் அடிப்படையில் உருவாகவில்லை. மனித தேவையின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது. குளிர்க் காலத்தில் இங்கு வாழும் மக்கள் அனைவரும் இயல்பாக நடமாடவும், இருளில் இருந்தும், குளிரில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள இது நமக்குத் தேவைப்படுகிறது” என்றார்.
விகநெல்லாவின் ‘செயற்கைச் சூரியன்’ அமைக்கப்பட்டதையடுத்து, நார்வே நாட்டின் ருஜூகான் என்ற பகுதியிலும் இதேபோன்ற ’செயற்கைச் சூரியன்’ 2013-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.