Israel PM: "பாலஸ்தீனம்னு ஒரு நாடே இருக்காது" ட்ரம்பின் ஆதரவால்.. ஓவராக ஆடும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
Israel PM: பாலஸ்தீனம் என ஒரு நாடே இருக்காது என்றும், அது எங்களுக்கு சொந்தமான இடம் என்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Israel PM: பாலஸ்தீனம் தொடர்பான இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் கருத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
”பாலஸ்தீனம் எனும் நாடே இருக்காது”
இஸ்ரேஸ் ராணுவத்தின் தாக்குதலால் காஸாவில் தினந்தோறும் பல உயிரிழந்து வருகின்றனர். அதுபோக போதிய உணவு இல்லாமல் பலர் பலியாகி வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பல உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த இனப்படுகொலையை தொடர்ந்து நிகழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில் தான், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரு பெரிய குடியேற்றத் திட்டத்திற்கான கையெழுத்து விழாவில் பேசிய இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு, பாலஸ்தீனம் எனும் நாடே இருக்காது என்று சபதம் செய்து பேசியுள்ளார்.
”எங்களுக்கு சொந்தமான நிலம்”
ஜெருசலேமுக்கு கிழக்கே உள்ள இஸ்ரேலிய குடியேற்றமான மாலே அடுமிமில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நேதன்யாகு, "பாலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றப் போகிறோம், இந்த இடம் எங்களுடையது. நாங்கள் எங்கள் பாரம்பரியம், எங்கள் நிலம் மற்றும் எங்கள் பாதுகாப்பைப் பாதுகாப்போம். நகரத்தின் மக்கள் தொகையை இரட்டிப்பாக்கப் போகிறோம்” என்ற அவரது பேச்சை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நேரலை ஒளிபரப்பியது.
E1 எனப்படும் தோராயமாக 12 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் ஒரு நகரத்தை அமைக்க இஸ்ரேல் நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. ஆனால் சர்வதேச எதிர்ப்பை எதிர்கொண்டு இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக முடங்கிப் போயிருந்தது. ஆனால், காஸா மீதான போரில் வலுவான சூழலில் இருப்பதால், திட்டத்தை இஸ்ரேல் வேகப்படுத்தியுள்ளது. இந்த இடம் ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றமான மாலே அடுமிம் இடையே, பாலஸ்தீன பிரதேசத்தின் வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபை தலைவர் கண்டனம்
இஸ்ரேல் பிரதமரின் பேச்சுக்கு ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்களது நடவடிக்கை மேற்குக் கரையை இரண்டாகப் பிரிக்கும் என்றும், அடுத்தடுத்த பாலஸ்தீன அரசுக்கு இருப்பிற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலின் அனைத்துக் குடியிருப்புகளும், இஸ்ரேலியத் திட்ட அனுமதியைப் பெற்றிருந்தாலும் சரி, சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்திற்கு குவியும் ஆதரவு
இதனிடையே, இங்கிலாந்து மற்றும் ஃப்ரான்ஸ் உள்ளிட்ட பல மேற்கத்திய அரசாங்கங்கள், இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க விரும்புவதாக அறிவித்துள்ளன. பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸின் 2023 அக்டோபரின் தாக்குதலால் தூண்டப்பட்ட பேரழிவு தரும் காசா போரில், இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு உடன்படத் தவறினால், இந்த நடவடிக்கையை எடுப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ஆனாலும், மேற்குக் கரையில் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இஸ்ரேலிய அரசு சாரா அமைப்பான பீஸ் நவ், கடந்த வாரம் E1 இல் உள்கட்டமைப்புப் பணிகள் சில மாதங்களுக்குள் தொடங்கப்படலாம் என்றும், வீட்டுவசதி கட்டுமானம் சுமார் ஒரு வருடத்திற்குள் தொடங்கப்படலாம் என்றும் கூறியது. இஸ்ரேலால் இணைக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமைத் தவிர்த்து, மேற்குக் கரை சுமார் மூன்று மில்லியன் பாலஸ்தீனியர்களையும், சுமார் 500,000 இஸ்ரேலிய குடியேறிகளையும் கொண்டுள்ளது.
ட்ரம்ப் ஆதரவால் ஆடும் நேதன்யாகு
சர்வதேச அளவில் போர்களை நிறுத்தி அமைதியை நிலைநாட்டி வருவதாக, ட்ரம்ப் தற்பெருமை பேசி வருகிறார். தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்டி வருகிறார். அதேநேரம், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் கருத்து எந்தவித கருத்தையும் சொல்ல மறுக்கிறார். சொல்லப்போனால் இஸ்ரேல் வெளிப்படையாக செய்து வரும் பல போர் குற்றங்களுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. உதாரணமாக ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஆதரித்ததும் ஒன்றாகும். இப்படி அதிபர் ட்ரம்பின் ஆதரவுடன், காஸாவில் நேதன்யாகு இனப்படுகொலை நிகழ்த்தி வருவதாக பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.





















