"ரொம்ப நாள் நீடிக்க போகுது.. இது போரின் 2-வது கட்டம்" பொடி வைத்து பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 8,000 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரில் கொல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களும் ஆவர்.
அமெரிக்க, பிரிட்டன் நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே,கடந்த 7ஆம் தேதி மோதல் தொடங்கியது.
இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் வான்வழி தாக்குகதல் மனதை உலுக்கும் வகையில் உள்ளது. வான்வழி தாக்குதலை தொடர்ந்து, தற்போது நிலத்தின் வழியேயும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 8,000 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரில் கொல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களும் ஆவர். போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரி உலக நாடுகளும் ஐநாவும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இஸ்ரேல் முனைப்பு காட்டி வருகிறது.
"இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ள போர்"
இந்த நிலையில், இந்த போர் நீண்ட காலம் நீடிக்கும் என்றும் தற்போது இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், "கூடுதல் தரைப்படைகள் காசாவிற்குள் நுழைந்துள்ளது. நிலம், வானம் மற்றும் கடல் என மூன்றின் வழியாகவும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்.
போரில் இறந்தவர்களின் குடும்பத்தினரையும், ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவர்கள், கடத்தப்பட்டிருப்பது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். பணயக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களை மீட்க எனது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
என் இதயம் உடைந்து போயுள்ளது. நான் அவர்களுக்கு மீண்டும் உறுதியாக கூறுகிறேன். இனி, ஒவ்வொரு கட்டத்திலும், எங்கள் சகோதர சகோதரிகளை மீட்டு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். நிலத்தின் வழியே தாக்குதலை நீட்டித்திருப்பது இந்த போரில் நமக்கு உதவியாக இருக்கும்" என்றார்.
ஹமாஸின் வேண்டுகோள்:
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் வெளியிட்ட அறிக்கையில், "இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் பாலஸ்தீன
கைதிகளை விடுவித்தால், நாங்கள் பணயக்கைதியாக பிடித்து வைத்திருப்பவர்களை விடுவிக்க தயாராக உள்ளோம். ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து அனைத்து பாலஸ்தீனிய கைதிகளையும் விடுவிக்கும் உடனடி கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ஈடுபட நாங்கள் தயாராக உள்ளோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசர கூட்டத்தில், காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகளின் ஆதரவு கிடைத்தது.
தீர்மானத்திற்கு ஆதரவாக பிரேசில், சீனா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட 120 நாடுகள் வாக்களித்த நிலையில், தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் புறக்கணித்தது.