(Source: ECI/ABP News/ABP Majha)
Israel War: "தொடங்கியது போர்" பாலஸ்தீனத்திற்கு எதிராக களமிறங்கிய இஸ்ரேல்.. உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்
இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ராக்கெட் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக காசாவில் உள்ள ஹமாஸ் படை மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழு, இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தாக்குதல் நடத்திய ஒரு சில மணி நேரங்களிலேயே போரை தொடங்கியுள்ளதாகவும் அதில் வெற்றிபெறுவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
முதலில், இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ராக்கெட் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக காசாவில் உள்ள ஹமாஸ் படை மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு தெற்கு இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக ஹமாஸ் குழு தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், 2,500 ராக்கெட்டுகளை கொண்டு மட்டுமே தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறுகிறார். வீட்டுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படை தாக்குதல் நடத்த காரணம் என்ன?
ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம் என்ற பெயரில் தாக்குதலை தொடங்கியுள்ளதாக ஹமாஸ் ரகசிய ராணுவ குழுவின் தலைவர் முகமது டெய்ஃப் தெரிவித்துள்ளார். ஆயுதங்களை எடுத்து கொண்டு போரிடுமாறு இஸ்ரேல் நாட்டில் வாழும் அரபு மக்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இஸ்ரேலில் வாழும் 20 சதவிகித மக்கள் அரபு மக்கள் ஆவர்.
"எதிரிக்கு அவரது காலம் முடிந்துவிட்டது என்பதை புரிய வைக்கும் நாள் இது. துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரும் அதை வெளியே எடுக்க வேண்டும். நேரம் வந்துவிட்டது" என முகமது டெய்ஃப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் உள்ள அல் அக்ஸா மசூதியை அடையாளம் தெரியாத இஸ்ரேலியர்கள் சேதப்படுத்தியதே ஹமாஸ் படை தாக்குதல் நடத்த காரணமாக அமைந்தது என முகமது டெய்ஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த மசூதி, இஸ்லாமியர்களின் புனித தளமாக கருதப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு மட்டும் இன்றி யூதர்களுக்கும் புனித தளமாக கருதப்படுகிறது. இந்த குறிப்பிட்ட பகுதிதான், பல ஆண்டுகாலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.
பதற்றத்திற்கு காரணம் என்ன?
காசா-இஸ்ரேல் எல்லை பகுதியில் கடந்த சில வாரங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் பலூன் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக வான்படை தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. ஆனால், இது பெரிய பிரச்னையாக வெடிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படாமல் இருந்தது. இச்சூழலில்தான், அல் அக்ஸா மசூதி சேதப்படுத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.