போர்க்களத்தில் Abp News.. ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஹமாஸை ஒழிப்பதே தங்கள் நோக்கம் என போரை தொடங்கிய இஸ்ரேல், அதன் முக்கிய தலைவர்களை கொன்றாலும் அதன் இலக்கை அடையவில்லை என்றே சொல்லப்படுகிறது.
பாலஸ்தீன பகுதியான காசாவில் ஹமாஸ் அமைப்பின் மூன்று முக்கிய தலைவர்களை மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மேற்காசியா முழுவதும் போரால் பற்றி எரிந்து வருகிறது. காசாவில் தொடங்கிய போர் ஈரான் வரை விரிவடைந்துள்ளது. இதற்கு எல்லாம் தொடக்கப்புள்ளியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் அமைந்தது.
பற்றி எரியும் மேற்காசியா:
பதில் தாக்குதல் நடத்துகிறோம் என சொல்லி போரில் இறங்கிய இஸ்ரேல், பிரச்னையை மத்திய கிழுக்கு நாடுகள் முழுவதும் பரவ செய்துள்ளது. காசா போர் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது சிறிய சிறிய தாக்குதலை நடத்தி வந்தது லெபனானில் இயங்கும் ஈரான் ஆதரவு இயக்கமான ஹிஸ்புல்லா.
காசாவில் ஏற்கனவே 40,000க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவம், லெபனானில் தாக்குதலை தொடங்கியது. பேஜர், வாக்கிடாக்கி தாக்குதல் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு இஸ்ரேலே காரணம் என சொல்லப்படுகிறது.
இதையடுத்து, லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. போரில் பெரும் திருப்பமாக ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் பாதுகாப்பு படை கொலை செய்தது.
போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற இஸ்ரேல்:
அதன் தொடர்ச்சியாக, தற்போது ஈரான், இஸ்ரேல் நாடுகள் இரண்டும் நேரடியாக போரில் குதித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியது.
மேற்காசியா முழுவதும் போர் விரிவடைந்துள்ள நிலையில், காசா போர் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, காசாவில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த மூன்று முக்கிய தலைவர்களை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அரசாங்கத்தின் தலைவரான ரவ்ஹி முஷ்தாஹா, ஹமாஸின் அரசியல் பிரிவில் பாதுகாப்பு இலாகாவை கவனித்து வந்த சமே அல்-சிராஜ் மற்றும் தளபதி சமி ஓதே ஆகியோரை கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதில், முஷ்தாஹா, ஹமாஸின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ஹமாஸின் படைகளை அனுப்புவது தொடர்பான முடிவுகளில் நேரடி முடிவுகளை எடுப்பவர். ஹமாஸின் உயர்மட்ட தலைவர் யாஹ்யா சின்வாருக்கு வலது கையாக இருந்தவர். நிதி விவகாரங்களையும் கவனித்து வந்துள்ளார்.
ஹமாஸை ஒழிப்பதே தங்கள் நோக்கம் என போரை தொடங்கிய இஸ்ரேல், அதன் முக்கிய தலைவர்களை கொன்றாலும் அதன் இலக்கை அடையவில்லை என்றே சொல்லப்படுகிறது.