"காசா மீது குண்டுகள் வீசுவது தொடரும்" இஸ்ரேல் தூதர் ஆவேசம்.. உலக நாடுகள் கவலை
உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும், பொது மக்கள் வாழும் பகுதிகளில் குண்டுகளை வீசக்கூடாது என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், தூதர் தெரிவித்த கருத்து மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோதலை, ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் பதில் நடவடிக்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
உலக மக்களின் மனசாட்சியை உலுக்கிய காசா தாக்குதல்:
குறிப்பாக, பாலஸ்தீன பகுதியான காசாவில் அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதுமட்டும் இன்றி, காசா நகர மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழி தாக்குதல் உலக மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுது. ஏற்கனவே, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்து, பாதுகாப்பு தேடி வரும் மக்கள் மீது இம்மாதிரியாக தாக்குதல் நடத்துவது மனிதாபிமானமற்ற செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், காசாவில் குண்டுகள் வீசுவதை இஸ்ரேல் நிறுத்தாது என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவுர் கிலான் தெரிவித்துள்ளார். உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும், பொது மக்கள் வாழும் பகுதிகளில் குண்டுகளை வீசக்கூடாது என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் தூதர் தெரிவித்த கருத்து மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
"காசாவில் குண்டுகள் வீசுவதை தொடர்வோம்"
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஹமாஸ் படையை முற்றிலுமாக ஒழிக்க தரை வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். இஸ்ரேலின் எதிர்காலத்திற்காக தாக்குதலை தொடர்வது அவசியம். ஹமாஸ் படையால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்ட 200 இஸ்ரேலியர்களை விடுவிக்க திட்டமிட்டு வருகிறோம்" என்றார்.
ஹமாஸ் தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டதற்கு இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அவர், "ஹமாஸ் படையை இன்னும் தீவிரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்கவில்லை. ஆனால், அதை தீவிரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்கும் என நம்புகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், "இப்படி ஒரு கொடூர செயலை எதிர்காலத்தில் மீண்டும் செய்வதற்கு ஹமாஸ் படைக்கு திறன் இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொடுத்த அறிவுறுத்தல்கள் ஆகும். அதேபோல, பணயக்கைதிகளை மீட்க வேண்டும். அதற்காக, தாக்குதலை தொடர்வது அவசியமாகிறது.
காசாவில் வசிக்கும் லட்சத்துக்கும் அதிகமான மக்கள், தங்களை பாதுகாத்து கொள்வதற்காக தெற்கு நோக்கி செல்லுமாறு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது. அரசாங்கத்தால் தங்களைப் பாதுகாக்க இயலாது என மக்கள் நினைப்பார்களேயானால், இஸ்ரேலுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.
சாதாரண இந்தியர்களிடமிருந்து இஸ்ரேலுக்குக் கிடைத்த ஆதரவு மிகப்பெரியது. மனதை தூண்டுவதாக இருந்தது. மேலும், அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து செய்தி வெளியிட்டதற்கு மோடிக்கு நன்றி" என்றார்.