Iran Minister Spy: ஈரானுக்கு பாதுகாப்பு அமைச்சர், இங்கிலாந்திற்கு உளவாளி.. கோடிகளில் பணம், சிக்கியது எப்படி?
ஈரானுக்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதே, இங்கிலாந்திற்காக உளவு வேலை பார்த்த அலிரிசா அக்பரி எப்படி சிக்கினார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதே, இங்கிலாந்திற்காக உளவு வேலை பார்த்த அலிரிசா அக்பரி எப்படி சிக்கினார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் உளவுபார்த்த பாதுகாப்பு அமைச்சர்:
கடந்த 2008ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், அவசர அவசரமாக இஸ்ரேலிற்கு சென்று, ஈரானால் அங்கு நடத்தப்பட இருந்த பெரும் தாக்குதல் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். ஈரானில் பாதுகாப்புத்துறையில் இருந்த முக முக்கிய புள்ளிகலை தவிர வேறு யாரும் அறிந்திடாத இந்த தகவலை அணுக, இங்கிலாந்திற்கு மிகவும் ரகசியமான மற்றும் ஒரு வலுவான உளவாளி உள்ளே இருந்ததாக பேசப்பட்டது. ஈரான் அணு ஆயுத சோதனைகளை தொடர்கிறதா என்பது உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின், சந்தேகத்திற்கான பதில்களை அந்த குறிப்பிட்ட உளவாளி நீண்ட காலமாக வழங்கி வந்துள்ளார். அது யார் என்பது பல ஆண்டுகளாக உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட ஒரு தூக்கு தண்டனை மூலம் அந்த சந்தேகம் நீங்கியது.
அலிரிசா அக்பரி:
கடந்த ஜனவரி மாதம் தூக்கிலிடப்பட்டது வேறு யாரோ அன்றி, ஈரானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அலிரிசா அக்பரி. கடந்த 1997ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஈரானின் துணை பதுகாப்பு அமைச்சராக இருந்த அலிரிசா கடந்த 2004ம் ஆண்டு முதல் இங்கிலாந்திற்கு உளவு வேலை பார்த்ததாக ஈரான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அணு ஆயுத ரகசியங்கள் வெளியீடு:
அமெரிக்காவின் பிரபல நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அலிரிசா அக்பரி 15 ஆண்டுகளாக இங்கிலாந்திற்கு உளவாளியாக செயல்பட்டுள்ளார். இங்கிலாந்து உளவு அமைப்பான எம்ஐ6-க்கு அலிரிசா ரகசிய தகவல்களை கொடுத்துள்ளார். 2004-ம் ஆண்டு ஈரான் அணு ஆயுத சோதனை மையங்களின் இடங்கள் தொடர்பான விவரங்களை இங்கிலாந்து உளவு அமைப்பிற்கு அலிரிசா ரகசியமாக கொடுத்துள்ளார். அணு ஆயுத ஆய்வில் ஈடுபட்ட மூத்த விஞ்ஞானிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஈரானிய அதிகாரிகளின் விவரங்களை அலிரிசா இங்கிலாந்திற்கு கொடுத்துள்ளார். இந்த தகவல்களின் அடிப்படையில் கடந்த நவம்பர் 2020 -ம் ஆண்டு ஈரானிய அணு ஆயுத மையத்தின் மூத்த விஞ்ஞானி மொஹ்சென் பக்ருசஹிதா மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் கொலை செய்ததாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.
ரஷ்யா உதவி:
தங்கள் அணு ஆயுத தயாரிப்பு தொடர்பான விவரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு தெரியவந்ததது எவ்வாறு? என்பது குறித்து கண்டுபிடிக்க ஈரான் அரசு ரஷியாவின் உதவியை நாடியுள்ளது. இதனை தொடர்ந்து ரஷிய உளவு அமைப்பு மேற்கொண்ட ரகசிய ஆய்வில் அலிரிசா தான் அணு ஆயுத தகவல்களை இங்கிலாந்திற்கு அனுப்பியது கண்டுபிடித்துள்ளது. இதனை அறிந்து, ஈரானில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அலிரிசாவுக்கு 2009-ம் ஆண்டு இங்கிலாந்து உளவு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதனால், அலிரிசா உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அவருக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்கப்பட்டது.
தூக்கிலிடப்பட்ட அலிரிசா:
இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் 2019ம் ஆண்டு ஈரான் சென்றார். அங்கு உளவு வேலையில் ஈடுபட முயன்றபோது அலிரிசாவை ஈரான் அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகவும், நாட்டின் ராணுவ ரகசியங்கள், அணு ஆயுத ரகசியங்கள், முக்கிய அதிகாரிகளின் விவரங்களை எதிரி நாடுகளுக்கு ரகசியமாக தெரிவித்ததாகவும் தேசதுரோகத்தில் ஈடுபட்டதாகவும் கூறி அலிரிசா அக்பரி மீது குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.