பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு விஷம்.. பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போடும் கொடூரர்கள்.. ஈரானில் நடந்தது என்ன?
பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலை தந்து வரும் ஈரானில் தற்போது மிக மோசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இஸ்லாமிய குடியரசான ஈரானில் பிற்போக்குத்தனமான பழமைவாத பல்வேறு சட்டங்கள் அமலில் இருக்கின்றன. குறிப்பாக, ஈரானில் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்:
உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினி என்ற இளம்பெண் அங்கு அடித்து கொல்லப்பட்டார். குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த 22 வயதான மாஷா அமினியை ஹிஜாப்பை சரியாக அணியவில்லை எனக் கூறி அவரை கைது செய்து அறநெறி காவல்துறையினர் கொடூரமாக தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இதனால், ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு தடைக்கல்:
இப்படி, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலை தந்து வரும் ஈரானில் தற்போது மிக மோசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து, நூற்றுக்கணக்கான பள்ளி படிக்கும் சிறுமிகள் சுவாச நச்சை சுவாசித்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தெஹ்ரானின் கோமில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்த ஈரான் இணை அமைச்சர், "பெண்களின் கல்வியை முடக்கும் நோக்கத்துடன் புனித நகரமான கோமில் பள்ளி மாணவிகளுக்கு சிலர் விஷம் கொடுத்துள்ளனர்" என்றார்.
இதுகுறித்து விரிவாக பேசிய சுகாதார இணை அமைச்சர் யூனுஸ் பான், "கோமில் உள்ள பள்ளிகளில் சில மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளும், குறிப்பாக பெண்கள் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இது செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது"
யாரும் கைது செய்யப்படவில்லை:
இந்த சம்பவம் பற்றிய மேலும் தகவல்களை பகிர அவர் மறுத்துவிட்டார். அதேபோல், இது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஆளுநர் அலுவலகத்திற்கு வெளியே அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க கூடினர். அடுத்த நாள் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அலி பஹதோரி ஜஹ்ரோமி, "உளவுத்துறை மற்றும் கல்வி அமைச்சகங்கள் விஷம் கொடுக்கப்பட்ட காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பதாக" கூறினார்.
கடந்த வாரம், வழக்குரைஞர் ஜெனரல் முகமது ஜாபர் மொண்டசெரி இந்த சம்பவங்கள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.