Iran Israel USA: வெடித்தது மூன்றாவது போர்? ஈரான் அணு ஆய்வு மையங்களை தாக்கிய அமெரிக்கா, இஸ்ரேலுடன் சேர்ந்த ட்ரம்ப்
Iran Israel USA Conflict: ஈரானின் மூன்று அணு ஆய்வு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக, அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Iran Israel USA Conflict: ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்காவும் இணைவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானை தாக்கிய அமெரிக்கா:
ஈரான் மீதான இச்ரேலின் வான்வழி தாக்குதலில் அமெரிக்கா நேரடியாக இணைவதாக, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஈரானில் உள்ள மூன்று அணு ஆய்வு மையங்கள் மீது தங்கள் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தலையீடு பரந்த பிராந்திய மோதலை ஏற்படுத்தும் என ஈரான் எச்சரித்த நிலையிலும், அந்நாடு அணு ஆயுத சக்தியை பெறுவதை தடுக்கும் நோக்கில் தாக்குதலை முன்னெடுத்ததாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஈரான் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
அதேநேரம், அரசு நடத்தும் ஊடகத்தில் வெளியான செய்தியில் ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நாடன்ஸ் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
போரை முடிக்க ட்ரம்ப் அறிவுறுத்தல்
ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய பகுதிகளில் உள்ள அணு ஆய்வு மையங்கள் மீது எங்களது முதல் வெற்றிகரமான தாக்குதல் முடித்துள்ளோம். எங்களது அனைத்து விமானங்களும் ஈரான் வான்வெளிக்கு வெளியே உள்ளது. முழு எடையிலான வெடிகுண்டுகள் முதன்மை இலக்கான ஃபோர்டோ மீது வீசப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலக நாடுகளுக்கு இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஈரான் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர தற்போது கட்டாயம் ஒப்புக்கொள்ள வேண்டும்” என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இலக்கு என்ன?
ஈரான் இஸ்ரேல் இடையேயான ஏவுகணை தாக்குதல்கள் ஒருவாரத்திற்கும் மேலாக நடைபெறு வரும் நிலையில் தான், அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் ஏவுகணை திறன்களை முறையாக ஒழிப்பதும், அதே நேரத்தில் அதன் அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை சேதப்படுத்துவதும் இஸ்ரேலின் இலக்காகும். ஆனால் அமெரிக்க ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களும், அவர்கள் மட்டுமே எடுத்துச் செல்லக்கூடிய 13,500 கிலோ பதுங்கு குழி வெடிகுண்டுமே, ஆழமான நிலத்தடியில் புதைக்கப்பட்ட ஈரானிய அணுசக்தி திட்டத்துடன் இணைக்கப்பட்ட பெரிதும் வலுவூட்டப்பட்ட தளங்களை அழிக்க சிறந்த வாய்ப்பை வழங்குவதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். அதன் காரணமாகவே தற்போது அமெரிக்கா நேரடியாக தாக்குலில் ஈடுபட்டுள்ளது.
வெடித்தது மூன்றாவது போர்:
ஏற்கனவே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நீண்டகாலமாக நிலவி வருகிறது. மறுமுனையில் இஸ்ரேல் மற்றும் காஸா இடையேயான போரும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்து வருகிறது. இந்த போர்களால் பல்வேறு பிரிவுகளில் சர்வதேச அளவில் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்து பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை நடத்தி மூன்றாவது போரை தொடங்கியுள்ளது. ஒருவேளை ஈரானுக்கு ஆதரவாக ஏதேனும் ஒரு நாடு இதில் களமிறங்கினால், மூன்றாவது போர் மூன்றாவது உலகப் போராகவும் மாற வாய்ப்புள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் உடன் சேர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடலில் உள்ள அந்நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




















