New plant species discover: உறையும் பனியில் பாசிச் செடி... கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி..பெயர் 'பாரதி'!
பென்குயின்கள் கூட்டமாக நடமாடும் பகுதியில்தான் இந்தப் பாசி தென்பட்டதாகச் சொல்கிறார் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஃபெலிக்ஸ் பாஸ்ட்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறும் வெண்பனி மட்டுமே தெரியும் அண்டார்ட்டிகா கண்டத்தில் ஒரு செடியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதையும் நமது இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்திருக்கிறது. உறையும் பனியில் எப்படிச் செடி வளரமுடியும்? ஆச்சரியமாக இருக்கிறதா? இதே சந்தேகம்தான் அதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கும்...
இந்தச் செடியைக் கண்டுபிடிக்க நமது இந்திய விஞ்ஞானிகளுக்கு ஐந்து வருடங்கள் ஆகியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்ட்டிக்காவில் ஆய்வு மையத்தை நிறுவியது இந்தியா. இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் அண்டார்ட்டிக்காவில் தனது 36வது பயணத்தை மேற்கொண்டிருந்தது இந்தியாவின் உயிரியல் ஆய்வாளர்கள் குழு. இந்தச் சமயத்தில்தான் அங்கே இந்தச் செடியையும் கண்டறிந்தார்கள் ஆய்வாளர்கள். அதன் வகையினத்தைக் கண்டறிய தற்போது ஐந்தாண்டுகள் ஆகியுள்ளது.
CUPB Scientists discovered a new plant species of moss in Antarctica, named it Bryum Bharatiensis as a tribute to Goddess Saraswatihttps://t.co/ojeZUhGBNX@EduMinOfIndia
— Central University of Punjab (@cup_bathinda) July 8, 2021
பாசி வகையினமான இந்தச் செடிக்கு ப்ரையும் பாரத்தியென்ஸிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் இந்தியப் பெயரான பாரதியை பின்பற்றி வழங்கப்பட்டுள்ளது. அண்டார்ட்டிகாவில் இருக்கும் இந்தியாவின் ஆய்வு மையம் ஒன்றுக்கும் பாரதி என்ற பெயர்தான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனைக் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் பஞ்சாப் மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் ஆய்வு ஜர்னல் ஆஃப் ஏசியா பசிஃபிக் பயோடைவர்ஸிட்டி என்னும் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
‘இந்த பாசி பென்குயின்கள் இடும் கழிவுகளில் தான் வளர்கின்றன. இந்த கழிவுகளில் உள்ள உரம் அந்த தட்பவெப்பத்துக்கு மக்குவதில்லை’
பனிக்கட்டிகளுக்கிடையே பாசி எப்படி?
-76 டிகிரி செல்சியஸில் உரையும் பனிக்கு நடுவே பென்குயின்கள் பனிக்கரடிகள் தவிர வேறு எதுவும் புலப்படாத பூமியில் பாசிச்செடி எப்படி வளர்ந்தது? பென்குயின்கள் கூட்டமாக நடமாடும் பகுதியில்தான் இந்தப் பாசி தென்பட்டதாகச் சொல்கிறார் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஃபெலிக்ஸ் பாஸ்ட். இவர் அண்டார்ட்டிகா சென்ற குழுவில் இடம்பெற்றிருந்தவர். ‘இந்த பாசி பென்குயின்கள் இடும் கழிவுகளில் தான் வளர்கின்றன. இந்த கழிவுகளில் உள்ள உரம் அந்த தட்பவெப்பத்துக்கு மக்குவதில்லை’ என்கிறார்.
இருந்தாலும் அண்டார்டிகாவில் 6 மாதகால பனிப்பொழிவுக்கு இடையே இந்த பாசி எப்படிப் பிழைத்தது என்பது அதிசயம்தான், சூரிய ஒளி இருக்காது, தட்பவெப்பம் 70 டிகிரிக்குக் கீழ் செல்லும். இந்தக் காலக்கட்டத்தில் ஒரு விதைபோல இந்தச் செடி வளராமல் உறைந்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மீண்டும் சூரியன் உதிக்க பாசியும் வளருமாம். அப்படியென்றால் வெண்பனி சூழ்ந்த அண்டார்ட்டிகா தற்போது பசுமையாகி வருகிறது. இந்தப் பனிப்பூமியில் முன்பு பிழைக்கமுடியாத பல செடிகள் தற்போது அங்கே வளரத் தொடங்கியுள்ளன. அதற்கு அந்தக் கண்டம் வெப்பமயமாதல் காரணமாக இருக்கலாம் என்கிறார் பேராசிரியர் பாஸ்ட்.