சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்து.. அமெரிக்கரின் உயிரிழப்புக்கு காரணமா?
அமெரிக்காவில் சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் மருந்து நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் அமெரிக்காவில் சிலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து, அந்த மருந்து நிறுவனம் அமெரிக்க சந்தையில் தனது விநியோகத்தை நிறுத்தியுள்ளது.
கண் சொட்டு மருந்து:
குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னையில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் இந்த மருந்து நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
அந்த மருந்தில் உள்ள பாக்டீரியா வகையால் மரணம், கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. Artificial Tears என்ற பெயரில், இந்த கண் சொட்டு மருந்தை எஸ்ரிகேர் மற்றும் டெல்சா நிறுவனம் அமெரிக்க முழுவதும் விநியோகித்து வருகிறது.
பார்வை இழப்பு:
ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும் செய்தி வெளியானதையடுத்து, இந்த மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்க அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கேட்டு கொண்டது.
இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், "ரத்தம், நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பாகங்களில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய சூடோமோனாஸ் ஏருகினோசா என்ற பாக்டீரியா வகை பரவி இருப்பது குறித்து ஆய்வு செய்தோம். பாக்டீரியாவின் இந்த வகை அமெரிக்காவில் முன்னதாக அடையாளம் காணப்பட்டதில்லை.
55 பேர் பாதிப்பு:
இதுவரை, 12 மாநிலங்களில் 55 பேருக்கு இந்த பாக்டீரியா வகை தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கண் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தொற்று ஏற்படுவதற்கு முன் குளோபல் நிறுவனம் தயாரித்த மருந்தை பயன்படுத்தினர். கண் தொற்று உள்ள மற்றும் இல்லாத நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட எஸ்ரிகேர் கண் சொட்டு மருந்துகளின் திறந்த பாட்டில்களில் பாக்டீரியா வகை இருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.
எஸ்ரிகேர் மருந்தை பயன்படுத்தியவர்கள் மற்றும் கண்களில் அசௌகரியத்தை உணர்ந்தவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Another major scandal appears to be brewing for Indian Pharma
— Joe Wallen (@joerwallen) February 3, 2023
Eye drops manufactured by Global Pharma Healthcare, a Chennai-based firm, recalled in the US after being linked to one death, five losses of vision and 55 cases of bacterial infectionhttps://t.co/kwOzJ9tFxZ
இந்த மருந்தின் இறக்குமதிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.