Trump on Trade Deal: இந்தியாவுக்கு நிம்மதி.. விரைவில் வர்த்தக ஒப்பந்தம்.. ட்ரம்ப் சொன்னது என்ன.?
இந்தியாவிற்கு நிம்மதி அளிக்கும் விதமாக ஒரு தகவலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவர் கூறியது என்ன என பார்க்கலாம்.

இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது, இந்தியர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. ட்ரம்ப் என்ன கூறினார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நண்பனான இந்தியாவுக்கும் பரஸ்பர வரி விதித்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்த நிலையில், நட்பு நாடான இந்தியாவுக்கும் கூடுதல் வரியை விதித்தார். இந்தியா அமெரிக்காவுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய அவர், அமெரிக்காவும் அதே அளவிற்கு பதில் வரியை விதிக்கும் என தெரிவித்து, அவ்வாறே செய்தார். அதன்படி, இந்தியாவிற்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது.
ட்ரம்ப் விதித்த வரிகளுக்கு சீனா மட்டுமே தொடர்ந்து எதிர்வினையாற்றியதால், அந்நாட்டை தவிர்த்து, மற்ற நாடுகளுக்கு, வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதோடு, அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த பேச்சுவார்த்தையில், நண்பனான இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
வர்த்தக ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?
இந்த நிலையில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தையின் நிலவரம் குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா உடனான பேச்சுவார்த்தை சிறப்பாக சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என கூறியுள்ளார்.
முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளை திட்டமிடப்பட்ட செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்கு முன்னதாகவே இறுதி செய்ய, இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த வாரம் வாஷிங்டனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, கட்டணம் மற்றும் கட்டணமற்ற விஷயங்கள் குறித்து பயனுள்ள விவாதத்தை தங்கள் குழு நடத்தியுள்ளதாகவும், இருதரப்புக்கும் நலன் பயக்கம் வகையில், பல துறை வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்யும் முதல் தவணை பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் அந்நாட்டின் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், மே மாத இறுதியில் நடைபெறும் பேச்சுவார்த்தை ஒரு தொடக்கமல்ல என்றும், ஏற்கனவே பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுவிட்டதால், அந்த கூட்டத்தில், துறை வாரியாக, நேரடி பேச்சுவார்த்தை நட்த்தி, 90 நாட்களுக்கு முன்னதாகவே, பரஸ்பர வரிகள் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், பரஸ்பர வரிகள் தொடர்பாக, முன்கூட்டியே ஓப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது, இந்தியாவிற்கு சற்று நிம்மதி அளிக்கும் செய்தியாக உள்ளது.





















