Pakistan Toshakhana Case: முறைகேடு வழக்கில் தீர்ப்பு.. 3 ஆண்டுகள் சிறை; எம்.பி பதவியை இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
Imran Khan: முறைகேடு குற்றச்சாட்டு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Imran Khan: முறைகேடு குற்றச்சாட்டு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் இம்ரான் கான் தனது எம்.பி பதவியை இழப்பதுடன், 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த இம்ரான்கான் 1996ம் ஆண்டு தெஹ்ரீக் –இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2018ம் ஆண்டு பாகிஸ்தானில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக பதவியேற்றார். அந்த நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ம் ஆண்டு இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இம்ரான்கான் பிரதமராக இருந்த காலத்தில் அரசு முறை பயணமாக சில வெளிநாடுகளுக்கு சென்றார். பாகிஸ்தான் சட்ட விதிப்படி, அந்தநாட்டு பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது வழங்கப்படும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி.
அந்த பரிசுப்பொருட்களை சேமித்து பராமரிக்கும் பணியை “தோஷகானா” செய்து வருகிறது. ஆனால், இம்ரான்கானோ அதை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் தன்னுடைய சொந்த கணக்கில் சேர்த்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் ஆஜராக வந்தபோது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.
உச்ச நீதிமன்றம் காட்டிய அதிரடி:
இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் பாகிஸ்தானையே புரட்டி போட்டது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதோடு அதை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இம்ரான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டம் கலவரமாக வெடிக்க, ராணுவம் குவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இச்சூழலில், இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் பாகிஸ்தான் மதிப்பில் ஒரு லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்ரான் கான் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த தீர்ப்பு தெஹ்ரீக் –இ – இன்சாப் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.